டில்லி

ச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் அவர் விடுவிக்கப் பட்டுள்ளதற்கு புகார் அளித்த பெண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாக முன்னாள் பெண் அலுவலர் தெரிவித்தார். அத்துடன் அதற்கு ஒத்துழைப்பு அளிக்காததால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் காவல்துறை மூலம் கடுமையாக துன்புறுத்தியதாகவும் கூறினார். இது குறித்து ஒரு புகார் மனுவை 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.

அந்த புகார் மீது நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது.    மூடிய அறைக்குள் நடந்த இந்த ரகசிய விசாரணையின் போது புகார் அளித்த பெண் வர மறுத்து விட்டார். அவர் இல்லாமல் நடந்த இந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி குழு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து புகார் அளித்த பெண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்தில் நலிவடந்தோருக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் இன்று நம்பிக்கை இழந்துள்ளேன். நீதித் துறையில் சக்தி வாய்ந்தவர்களுக்கு எதிராக போராடினால் பலன் கிடைக்காது என்பதையும் புரிந்துக் கொண்டேன். இந்த விசாரணையில் தலைமை நீதிபதியைப் போல் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைப்பார்களா என்பதையும் எனக்கு தெரிவிக்கவில்லை.

இந்த குழு விசாரணை முடிந்ததும் நீதிமன்ற பொதுச் செயலர் இந்த மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இந்த புகாருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என குழு கூறியது இந்திய பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். எனது புகார் மனுவை ரத்து செய்வதால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மேலும் கொடுமைகள் நடக்கலாம் என அஞ்சுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.