திருவனந்தபுரம்

கத்தியர் கூடம் மலையில் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என பெண் உரிமை அமைப்பின் தலைவி சுல்ஃபத் போராட்டம் தொடங்கி உள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலையில் பத்து வயது முதல் 50 வரையில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.   இதை எதிர்த்து பல பெண் உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.   இது குறித்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.   தற்போது கேரளாவில் உள்ள அகத்தியர் கூடம் என்னும் மலையில் ஏற பெண்களுக்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி பெண் உரிமை அமைப்பான பெண்ணொருமா வின் தலைவி சுல்ஃபத் அரசிடம் போராடி வருகிறார்.

குறுமுனி என அழைக்கப்படும் அகத்தியர் பெயரால் அமைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அகத்தியர் கூடம் மலையில் ஏற பெண்களுக்கும் மற்றும் 14 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   முதலில் ஆண்டு முழுவதும் இந்த மலையில் ஏற ஆண்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  தற்போது ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  தினம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.   இந்த வருடம் மலை ஏற விண்ணப்பித்திருந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.   மிகவும் செங்குத்தாக உள்ள இந்த மலையின் உச்சியில் அகத்தியர் சிலை ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து பெண்ணொருமா அமைப்பின் தலைவி சுல்ஃபத், “இந்த மலையில் உள்ள பழங்குடியினர்  அகத்தியர் ஒரு பிரம்மசாரி எனவும் அதனால்  பெண்கள் அவர் பெயரில் உள்ள மலையில் ஏறுவது பாவம் எனவும் கூறுகின்றனர்.  மேலும் பெண்களை அனுமதித்தால் கடும் வெள்ளம் வந்து இந்த இடமே அழிந்து விடும் எனவும் கூறுகின்றனர்.  இந்த மலை ஏறுதல் என்பதில் எந்த விதமான மத நடவடிக்கையும் கிடையாது.   வனத்துறை மூலம் அனுமதிக்கப்படுகிறது.   வனத்துறை அமைச்சர் ராஜு இது குறித்து நடந்த கூட்டத்தில் பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.  தற்போது அவரது வாக்கை மீறி  உள்ளார்.   ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என அரசு செயல்படுகிறது.  இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்” என தெரிவித்தார்.

இது குறித்து வனத்துறை அதிகாரியான ஷாஜிகுமார், “இது மிகவும் அபாயகரமான பகுதி.  பெண்களை அனுமதிக்காததற்கு அதுதான் காரணம்.    மற்றபடி பழங்குடியினர் இதை தடுக்கவில்லை.   சென்ற முறை மலை ஏறும் போது, ஒரு காட்டெருமை குழுவின் காவலரை தாக்கியது.   அதனால் அப்போது நாங்கள் ஆண்களும் மலை ஏறுவதையே தடுத்துள்ளோம்.   நாங்கள் பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு பெண் உரிமை அமைப்பின் தலைவி திவ்யா, “வன விலங்குகளால் ஆபத்து என்றால் யாரையுமே அனுமதிக்கக் கூடாது.   இத்தனை வருடங்களாகியும் பெண்களுக்கு பாதுகாப்பு அமைக்கவில்லை என்பது அரசின் தவறு.   நாங்கள் இது குறித்து சட்டபூர்வமாக போறாட உள்ளோம்.   ஆண் பெண் இருவருக்கும் சமமாக நீதி கிடைக்க வேண்டும்”  என தெரிவித்துள்ளார்