டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேவிட் வார்னர் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில்,. ஆஸி அணி. 263 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று (17ந்தேதி) டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா, போலண்ட் நீக்கப்பட்டு ஹெட், அறிமுக சுழல் மேத்யூ குனேமன் இடம் பெற்றனர். இந்திய அணியில் சூரியகுமாருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டார்.
2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், கவாஜா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. வார்னர் 15 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார். அடுத்து கவாஜா – லாபுஷேன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தனர்.
லாபுஷேன் 18 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் எல்பிடபுள்யு ஆகி வெளியேற, அதே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டானது ஆஸி.க்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. ஹெட் 12 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ராகுல் வசம் பிடிபட, ஆஸி. 31.2 ஓவரில் 108 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில், கவாஜா – ஹேண்ட்ஸ்கோம்ப் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கவாஜா 81 ரன் (125 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி (0) இருவரும் ஜடேஜா சுழலில் பெவிலியன் திரும்பினர். ஆஸி. 168 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற, கடுமையாகப் போராடிய ஹேண்ட்ஸ்கோம்ப் – கேப்டன் கம்மின்ஸ் ஜோடி 59 ரன் சேர்த்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் அரை சதம் அடித்து அசத்தினார்.
கம்மின்ஸ் (33 ரன்), டாட் மர்பி (0) இருவரையும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்ற, நாதன் லயன் 10 ரன், குனேமன் 6 ரன் எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்து (78.4 ஓவர்) ஆல் அவுட்டானது.
இந்திய பந்துவீச்சில் ஷமி 4, அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது (9 ஓவர்). ரோகித் 13 ரன், ராகுல் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. டெல்லியில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட், இந்திய வீரர் செதேஷ்வர் புஜாராவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இந்த சாதனை மைல் கல்லை எட்டும் 13வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதையொட்டி, முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புஜாராவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.