டெல்லி: சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், உ.பி.பாஜக மாநில அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களிடம், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக உபி அரசு அபராதம் வசூலித்து வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘நோட்டீசை வாபஸ் பெறுங்கள் அல்லது ரத்து செய்வோம்’ என எச்சரித்துள்ளது.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை இன மக்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு, பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சேதத்துக்கான தொகையை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பர்வைஸ் ஆரிப் டிட்டு என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, இது தொடர்பான நோட்டீசை மாநில அரசு வாபஸ் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், அரசு இதுவரை வாபஸ் பெறவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீங்கள் சட்டப்படி உரிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு பிப்ரவரி 18 வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று கூறியதுடன், உத்தரப் பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர் போல் நடந்து கொள்கிறது. எனவே, இந்த நோட்டீஸை வாபஸ் பெறவில்லை என்றால் அதை நாங்கள் ரத்து செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் நீதித்துறை அதிகாரிகள் உரிமைகோரல் தீர்ப்பாயங்களில் நியமிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது தாடர்பாக ஏற்கனவே கடந்த 2009 மற்றும் 2018 ஆண்டுகளில் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆனால், நீங்கள் அதற்குப் பதிலாக கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமித்துள்ளீர்கள் என்று சாடியதுடன்,
2019 டிசம்பரில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எதிராக மட்டுமே இந்த வழக்கு தொடப்பட்டுள்ளது. வன்முறை சேதம் தொடர்பாக மொத்தம் 236 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநிர அரசு கூறியுள்ளது.ஆனால், உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் 236 நோட்டீஸ்களை வாபஸ் பெறுவது பெரிய விஷயம் இல்லை. எங்கள் பரிந்துரைகளைக் கேட்க முடியாது என்றால், பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று கூறியதுடன்,
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு செயல்பட்டு உள்ளது” என்றும் நீதிபதிகள் கடுமையாக கூறினர்.