டெல்லி: தமிழகஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்ஆர்.என்.ரவியை  திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது. திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இதற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதனால் இன்று பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த அதிமுக ஆட்சியின்போது  நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவரை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, நீட் விலக்கு மசோதா நிறைவேற்றிஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அவர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் பதில் உரையில் பேசிய போது கூட நிதி அமைச்சர் பிடிஆர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது.

மத்தியஅரசுக்கும் அனுப்பி வைக்கவில்லை. மேலும், தமிழ அரசின் பல்வேறு மசோதாக்களுக்கும் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால்  தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழகஅரசும், ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதுபோல ஆளுநரின் சில நடவடிக்கைகளும் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில், தமிழகஅரசின்  3 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்று நாடாளுமன்ற அவை கூட்டம் நடக்க உள்ள நிலையில் திமுகவின் ஆளுநர் நீக்கம் தொடர்பான நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரின் தொந்தரவுக்கு எதிரான போக்கு அதிகரித்து வருவதால், திமுகவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது. இதனால் பாராளுமன்றத்தின் மக்களவை யில் இன்று அனல்பறக்கும் விவாதங்களுக்கும், சலசலப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது.

முன்னதாக, மாநிலங்களையில் திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக தனிநபர் மசோதா ஒன்றை கடந்த வாரம் கொண்டு வந்தார். அதில்,  மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.