டெல்லி:

கடந்த மாதம் 132வது இடத்தில் இருந்த இந்திய கால்பந்து அணி 31 இடங்கள் முன்னேறி 101வது இடத்தை பிடித்துள்ளது.  இது கடந்த 1996ம் ஆண்டுக்கு பின்னர் சிறந்த தரவரிசை இடம் என கருதப்படுகிறது.  சமீப காலமாக இந்திய அணி பெற்ற தொடர் வெற்றிகளின் காரணமாக இந்திய அணி ஆசியாவில் 11வது இடம் பிடித்தது

1996ம் ஆண்டு பிப்ரவரியில் ஃபிபா (சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு) தரவரிசை பட்டியலில் 94வது இடம்பெற்றது. 1993ம் ஆண்டு நவம்பரில் 99வது இடமும், அதே வருடம் அக்டோபர் மற்றும் டிசம்பர் மற்றும் 1996ம் ஆண்டு ஏப்ரல் ஆகிய 3 முறை 100வது இடத்தையும் பிடித்திருந்தது.

கடந்த 2 வருடங்களில் 13 போட்டிகளில் 11ல் வெற்றி கண்டது.  மொத்தம் 31 கோல்களையும் அடித்திருந்தது இந்திய அணி. சமீபத்தில் மியான்மரில் நடந்த ஏ.ஃஎப்.சி. ஆசிய கோப்பை தகுதி போட்டியில்      மியான்மரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி கண்டது.  இது 64 வருடங்களுக்கு பின்னர்     மியான்மரில் நிகழ்ந்த சாதனையாகும்.

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் தரவரிசை பட்டியல் பற்றி கூறுகையில், ‘‘ இது கடினமான பாதை.  அணியில் இளம் வீரர்களை கொண்டு வருவது மற்றும் அணியில் இடம்பெற போட்டிகளை உருவாக்குவது என்பது ஒரு நடைமுறை.  நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார்.