டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை 2025 டிசம்பர் 1 முதல் 2025 டிசம்பர் 19 வரை கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.
தற்போது நாட்டின் 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தொடர் சலசலப்பபை ஏற்படுத்தும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அவரது எக்ஸ் தளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அவர் அந்த பதிவில், டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் ஒரு ஆக்கப்பூர்வமான அமர்வை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. மேலும், SIR விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்த 2025 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் காரசார விவாதங்களுடன், அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.