டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே கூட்டத்தொடர் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடையும் என்று புதன்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடையும்.
ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த ஒரு வாரத்தில், குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மற்றும், IPC, CrPC மற்றும் எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று முக்கிய மசோதாக்கள் அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.