ண்டன்

ண்டனில் தஞ்சம் கோருவதன் மூலம் நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவில் இருந்து விஜய் மல்லையா தப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மதுத் தொழிற்சாலை, விமான சேவை உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வந்தார்.   பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய வங்கிகளில் இருந்து கடன் வாங்கிய இவர் திருப்பி செலுத்தவில்லை.  இதனால் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி இந்தியாவில் இருந்து தப்பி ஓடி லண்டனில் வசித்து வந்தார்.  அவரை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விஜய் மல்லையா தனக்குச் சிறையில் சரியான வசதிகள் இருக்காது எனப் பல மறுப்புக்களைத் தெரிவித்து இந்தியா அனுப்பக் கூடாது என வாதிட்டார்.  அவரை அடைக்க உள்ள சிறையின் விடியோக்கள் உள்ளிட்ட பல தகவல்களை அனுப்பிய இந்திய அரசு சார்பில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.   அதையொட்டி விஜய் மல்லையா அளித்த  மேல் முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

எனவே விஜய் மல்லையாவை பிரிட்டன் விரைவில் நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் விஜய் மல்லையா நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க வழி உள்ளதாக கரிஷ்மா வோரா என்னும் பெண் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  இவர் ஆங்கிலேய நீதிமன்றத்தில் இந்தியக் கட்சிகளுக்காகப் பல முறை வாதாடி உள்ளார்.

கரிஷ்மா, “லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா  தஞ்சம் கோரி மனு செய்தால்  அது குறித்த விவரங்களை நீதிமன்றம் வழக்கு முடியும் வரை வெளியிடாது.  அத்துடன் அவரது தஞ்சம் கோரும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ அல்லது இதற்கான விசாரணை முடியும் வரையிலோ அவரை நாடு கடத்த முடியாது.    மேலும் தஞ்சம் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் மேல் முறையீடு செய்வதன் மூலம் அவர் தம்மை நாடு கடத்துவதைப் பல வருடங்களுக்கு நிறுத்தி வைக்க முடியும்.

பிரிட்டன் நாட்டுச் சட்டப்பிரிவு 39(3) இன் படி ஒருவர் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்தால் அவரை ஏற்கனவே பிறப்பித்துள்ள நீதிமன்ற உத்தரவின்படி நாடு கடத்தக் கூடாது எனவும் தஞ்சம் கோரும் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு வரும் வரையில் அவரை அதே நாட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் உள்ளது.  இது குறித்து விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் அவருக்கு தெரிவித்திருப்பார் எனவும் கடைசி நிமிடத்தில் அவர் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் எனவும் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.