ஜெனீவா: 

கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னரே வைரஸின் உருவாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானது என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல்கள் வெளி உலகுக்கு வரத்தொடங்கியதும் அந்த சந்தையும் மூடப்பட்டது. இன்று வரை அந்த சந்தை திறக்கப்படவே இல்லை. மூடிதான் கிடக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல; சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது.

இந்நிலையில், சீன ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக, அதற்கான குழுவை சீனா அனுப்ப உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதையடுத்து கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து விசாரணை நடத்துவதற்காக அமெரிக்க அனுப்பும் விசாரணைக் குழுவை அமெரிக்க சீனாவுக்கு அனுப்பியது. இந்த குழுவை நாட்டிற்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது.

இதுஒரு புறம் இருக்க, கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கப்புள்ளி தொடர்பாக அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டின. அமெரிக்கா ஒருபடி மேலே சென்று, சீனாவில் ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, கொரோனா வைரஸ் உருவானது தொடர்பான தன்னிச்சையான விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

சுமார் 7 பக்க கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரைவுக்கு, 35 நாடுகளும் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் என மொத்தம் 62 நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது, 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரைவில், `கொரோனா வைரஸ் முதலில் எப்படி விலங்குக்கு வந்தது… விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது?’ உள்ளிட்ட பல விஷயங்களை உலக சுகாதார அமைப்பு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான, விரிவான மதிப்பீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பாக ஆஸ்திரேலியா திட்டமிட ஆரம்பித்தது முதலே சீனா எச்சரித்தது. எனினும், தற்போது இந்தியா உள்ளிட்ட 62 நாடுகளின் ஆதரவுடன் இந்த வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியா ஒரு பக்கமாக நிற்பது இதுவே முதல்முறை. அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சாட்டிய பின்னரும் இந்தியா, கொரோனா வைரஸ் விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. `தற்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் நாடு இருக்கிறது. அது முடிந்த பின்னரே வைரஸின் உருவாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும்’ என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. சீனாவைத் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் அமெரிக்கா, இந்த வரைவை தற்போது வரை ஆதரிக்கவில்லை.

62 நாடுகளின் கோரிக்கை வரைவில், சீனா குறித்தோ, வுஹான் குறித்தோ எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. அதனால் அமெரிக்கா இந்த வரைவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பின்மீது இருக்கும் கோபமே, அமெரிக்கா இதனை ஆதரிக்காததற்குக் காரணம் எனவுன் கூறப்படுகிறது. இந்தியா, தீவிர ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், சீனாவின் க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, `விசாரணை அறிவியல் பூர்வமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இது, சீனாவை ஆளும் கம்யூனிஸ கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.