பா.ம.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், காவேரி என அரை டஜனுக்கும் மேற்பட்ட  தலைவர்கள்  பிரிந்து சென்றாலும் -கடைசியாக விலகி தனி இயக்கம் கண்டுள்ள வேல்முருகனுக்கு வன்னியர் பெல்டில் ஓரளவு ஆட்கள் உள்ளனர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் டெபாசிட் கூட வாங்காத விஜயகாந்துக்கே, பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் – டெபாசிட் வாங்கிய வேல்முருகனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா என்ன?

தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும்  வேல்முருகன் – கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு- 32 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட்டை காப்பாற்றி கொண்டார்.

அவரை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பெரிய கட்சிகளான  தி.மு.க.,அ.ம.மு.க. ஆகிய இரண்டும் தூண்டில் போட்டுள்ளன.

காரணம் என்ன?

பண்ருட்டி, தீரன் போன்றோர்-  பா.ம.க.வில் இருந்து வரும் போது பெரிதாக ஆட்களை தங்களுடன் கூட்டி வரவில்லை. ஆனால் வேல்முருகன் அதைச்செய்தார்.

சென்னையில் கூட திரளான கூட்டத்தை வைத்துள்ளார். பா.ம.க.-அ.தி.மு. க. கூட்டணியை விரும்பாத வன்னியர்கள், குறிப்பாக பா.ம.க.வினர் வேல்முருகனுடன் இப்போது நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

வேல்முருகன் மூலமாக அவர்கள் ஆதரவை பெற முடியும் என்று நம்பும் பெரிய கட்சிகள் –இதனால் தான் அவரை  தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் வேல்முருகன் இன்னும் சில தினங்களில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.அதனை முடித்து விட்டு  கூட்டணியை முடிவு செய்ய திட்டம்.

-பாப்பாங்குளம் பாரதி