சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், அவர்மீதான வழக்குகள் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கலை உருவாக்கி உள்ளது.

திமுக உடனான கூட்டணி உடன்பாடு படி மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க திமுக தலைமை உறுதி அளித்துள்ளது. அதன்படி அந்த இடம் வைகோவுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

ஆனால், அவர் மீதான தேசதுரோக வழக்கில் வரும் 5ந்தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. தீர்ப்பு வை.கோ.வுக்கு சாதகமாக வந்தால், அவர் எம்.பி.யாக தேர்வு பெறுவதில் எந்தவித தயக்கமோ, பிரச்சினையோ இருக்காது. அதேவேளையில் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்தால், அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே இந்த வழக்கில் அவர் சிறை சென்ற வந்துள்ள நிலையில், தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதை கருத்தில்கொண்டே நாளை மதிமுக நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும், உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டத்தையும் வைகோ கூட்டி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோவுக்கு மாற்றாக ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு 6 பேர் தேர்வாக உள்ள நிலையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை படி திமுகவுக்கு 3 எம்.பி.க்களும், அதிமுகவுக்கு 3 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில், திமுக 2 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள ஒரு இடம் மதிமுகவுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த இடத்திற்கான வேட்பாளர் பெயர் இதுவரை வெளியிடப்பட வில்லை.

மதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது 5ந்தேதி வெளியாக உள்ள தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 8ந்தேதி வரை நடைபெறு கிறது. ஆகவே, 5ந்தேதி வைகோ மீதான தேசதுரோக வழக்கின் தீர்ப்பை பொறுத்தே வைகோ போட்டியிடுவாரா என்பது தெரியவரும்.

வைகோ மீதான தேசதுரோக வழக்கு விவரம்:

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவரது உரை,  இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால்,  வைகோ மீது தேசத்துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

அதைத்தொடர்ந்து, அவர்மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப் பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 5-ம் தேதி வெளியாகி உள்ளது.