டெல்லி: பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் நாட்டிற்கு செல்கிறார். ஏற்கனவே ரஷ்ண பிரதமர் புடினுடன் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்திய நிலையில், தற்போதைய பிரதமரின் உக்ரைன் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பயணத்தின்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசும் பிரதமர், ரஷியா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ பிரச்சினை காரணமாக, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2022ல் தொடங்கிய போர் இன்றுவரை நீடித்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது.
போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டுமாறும் , இரு நாடுகளுக்கும் இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தியபோதிலும் போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இந்தியா ரஷியா மற்றும் உக்ரைனுடன் நட்பை போற்றி வருகிறது. இதனால், இரு நாட்டு அதிபர்களுடன் உரிமையுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் ரஷியாவில்ந டைபெற்ற 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி வரும் 23ந்தேதி அரசுமுறை பயணமாக உக்ரைன் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக அரசுமுறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் 23ம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் செல்கிறார். பிரதமரின் உக்ரைன் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும்.
உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான உயர்மட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தப் பயணம் ஏதுவாக இருக்கும். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எந்தவிதமான உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.