டெல்லி:

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், குற்றவாளி  தூக்குக்கு தட விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுமீது நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி  அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி மருத்துவமாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொடூர  வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 1ந்தேத காலை தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் ஏற்கனவே இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற விடாமல், குற்றவாளிகள் தரப்பில் தொடர்ந்து வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்து, கால நேரம் வீணடிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா என்பவன், தனக்கு சிறார் சட்டத்தின்படி, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது குற்றவாளிகள் தரப்பில்,  மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிடெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்த்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைப்பதாக நீதிபதி தர்மேந்தர் ராணா  உத்தரவிட்டு உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.