நெட்டிசன்:

 கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு பாராமுகமாக அணுகுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஒற்றைத் தீர்ப்பாயம் அமைத்தால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு என்னவாகும் என்பது கேள்விக்குறியாகும்.

இதுவரை 8 தீர்ப்பாயங்கள் அமைக்கப்ட்டன. மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956ன் படி இந்தியாவில் இதுவரை எட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை ஆறுகள் தொடர்பாக அமைக்கப்ட்ட மூன்று தீர்ப்பாயங்கள் தவிர காவிரி உள்ளிட்ட மற்ற ஐந்து தீர்ப்பாயங்களும் செயலற்ற நிலையில் உள்ளன. அண்மையில் பாராளுமன்றத்தில், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு  திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, “காவிரி மற்று ராவி, பியாஸ் நதிகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் பயனற்றுப் போய்விட்டன. அதனால் அவற்றை கலைக்கலாம்” என்றார்.

1968க்கு முன்பே தொடங்கிய இந்த காவிரிப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டாமல் போய் கொண்டே இருப்பது வேதனையான விடயமாகும். இந்த காலக்கட்டத்தில் கர்நாடகம் சட்டத்திற்கு புறம்பாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, யாகச்சி, சுவர்ணவதி என 70 டி.எம்.சி தண்ணீரை எடுத்துக்கொள்ளும் வகையில் அணைகளை கட்டியது.

தற்போது மேகதாது அணையை கட்டுவதற்கான பணிகளை துவங்கிவிட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேயாறையும் உரிமை கொண்டாடுகின்றது. இப்படி அத்துமீறி கர்நாடகம் நடந்து கொள்வதை மத்திய அரசு பார்த்து கொண்டு இருக்கிறதே ஒழிய தடுத்து நிறுத்த மனமில்லை. சமரச பேச்சுவார்த்தை என்று காலங்களை கடத்தி தமிழகத்தின் உரிமைகளை காவிரியில் மறுக்கப்பட்டது. இப்பொழுது ஒற்றைத் தீர்ப்பாயம் என்று சொல்லி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை செயலிழக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கி இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

 

#cauveryissue

#காவிரிநதிநீர்பிரச்சனை

#ksrpostings

#ksradhakrishnanpostings

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

06/05/2017