உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் வெவ்வேறு முடிவுகள் வெளியாகியுள்ளன.
7 கட்டங்களாக….
உத்தரப்பிரதேசத்தில் வரும் 11-ந்தேதி முதல் மார்ச் மாதம் 8-ந்தேதி வரைக்கும் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மிகப்பெரும் மாநிலம் என்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 7 கட்டங்களாக இங்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
டைம்ஸ் நவ்
இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் – விஎம்ஆர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:- மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 202 இடங்களை பாஜக கைப்பற்றும். மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 34 சதவீதம் பாஜகவுக்கு கிடைக்கும். கடந்த 2012-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி 155 இடங்களை கைப்பற்றி இருந்தது.
மாயாவதி பின்னடைவு
தற்போது அமைக்கப்பட்டிருக்கும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும். கடந்த தேர்தலின்போது 252 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றி இருந்தது. சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போது 31 சதவீத வாக்குகள் கிடைக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 47 இடங்களில் வெற்றி பெறும். மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 24 சதவீதம் அந்த கட்சிக்கு கிடைக்கும். இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி – சி.எஸ்.டி.எஸ்
ஏபிபி செய்தி நிறுவனம் – சி.எஸ்.டி.எஸ். அமைப்பு நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பின் விவரம்:- உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும். இதன் அடிப்படையில் 187 முதல் 197 இடங்கள் வரை அந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பாஜகவுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அக்கட்சி 118 முதல் 128 இடங்கள் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது
மற்றொரு முக்கிய கட்சியான பகுஜன் சமாஜுக்கு 23 சதவீத வாக்குகள் கிடக்கக் கூடும் என்றும் 76 முதல் 86 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தி வீக் – ஹன்சா
முன்னதாக தி வீக் வார இதழும் – ஹன்சா நிறுவனமும் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின. அதில், பாஜகவுக்கு 192 முதல் 196 இடங்கள் வரையிலும், சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு 178 முதல் 182 இடங்கள் வரையிலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20 முதல் 24 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.