ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால், யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட அந்தப் பகுதிகளில், ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ச்சியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் அதனுள் அடங்கிய 35ஏ ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இந்த 35ஏ பிரிவின்படி, காஷ்மீர் மாநிலத்தின் இயல்பான குடிமக்கள் மட்டுமே அங்கே நிலம் வாங்கவோ, முதலீடு செய்யவோ முடியும்.
வெளியிலிருந்து யாரும் சென்று முதலீடு செய்ய முடியாது மற்றும் குடியுரிமை பெறவும் முடியாது. இதனால், உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமான காஷ்மீரில் கடைவிரிக்க முடியாமல் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் திண்டாடி வந்தன.
தற்போது, அவர்களுக்கு இருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டிருப்பதால், அங்கே ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலா தொழில்துறை பெரியளவில் வளர்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்களை அடுத்து, சில்லறை வணிகம், பொழுதுபோக்கு, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த துறைகளில் எல்லாம் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கும் என்பதே இதன் அர்த்தம். ஆனால், அங்கு தற்போது நிலவும் பதற்றமான சூழல் சரியான பின்பே இத்தகைய தொழில் முதலீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.