தமிழகத்தில் பட்டியலிடப்படும் சாதிக் கட்சிகளுள் மருத்துவர் ராமதாஸ் தலைமை வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று.
கடந்த 70கள் மற்றும் 80களில், முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கியிருந்த வன்னியர் இன மக்கள், நக்சல்பாரி சிந்தனைகளில் பெருமளவிற்கு ஈர்க்கப்படும் அபாயம் இருந்ததால் மற்றும் அப்படியான ஆபத்தை அரசு சந்தித்ததால், அந்தச் சிந்தனையை மடை மாற்றுவதற்காக அதிகாரவர்க்கம் உருவாக்கிய ஒரு கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி என்றொரு கருத்து உண்டு.
‘வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை’ என்பன போன்ற திராவிடக் கட்சிகளுக்கு இணையான ரைமிங் கோஷங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வளர்ந்த அக்கட்சி, தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தையும், வெற்றிகளையும் பெற்றது.
குறிப்பிட்ட காலங்களில், தலித்துகளை அரவணைத்து அரசியல் செய்ய முயன்றதாய் ராமதாஸ் அடையாளப்படுத்தப்பட்டாலும், அதெல்லாம் ஒரு கண்துடைப்பு என்ற விமர்சனங்கள் தலித் அமைப்புகள் மத்தியில் எழாமல் இல்லை.
ஒருகட்டத்தில், பாமகவின் அரவணைப்பு அரசியல் என்பது தலித்துகளுக்கு எதிராக இதர இடைநிலை சாதிகளை அரவணைத்து ஒருங்கிணைப்பது என்ற அளவில் உருமாறியது. அதேசமயம், தென் தமிழகத்தில் காலூன்றும் முயற்சியாக, அப்பகுதியில் கணிசமாக வாழும் ஒரு அட்டவணை சாதியுடன் இணைந்து செயல்படுவதற்கு ராமதாஸ் தொடக்க காலங்களில் மேற்கொண்ட முன்னெடுப்புகளும் வெற்றியடையவில்லை.
வட தமிழகத்தில், பாமகவின் எழுச்சியை வன்னியரல்லாத இதர சாதி இந்துக்கள் எப்போதும் ரசிக்கவில்லை. மேலும், வன்னியர்களிலும் நான்கில் ஒரு பகுதியினரையே அக்கட்சியால் தன் பக்கம் ஈர்க்க முடிந்தது.
கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனக்கு கிடைத்த 7 இடங்களில், 4 இடங்களில் இதர சாதி வேட்பாளர்களை நிறுத்தி, தான் பொதுவான கட்சி என்ற பிம்பத்தை அக்கட்சி பெயரளவிற்கு கட்டமைக்க முனைந்தது. ஆனால், எதுவும் எடுபடவில்லை.
தமிழக அரசியல் சூழல் என்பது பிற மாநிலங்களிலிருந்து பெரியளவில் வேறுபட்டது. அங்கேயெல்லாம் பெரும்பான்மை சாதி அரசியல் செல்லுபடியாகும். ஆனால், தமிழகத்தில் நிலைமை அப்படியல்ல.
பாமக என்ற வன்னியர் அடையாளம் கொண்ட கட்சியை, இதர பெரும்பான்மை சாதிகள் மற்றும் வேறு சிறுபான்மை சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இப்படியான சூழலில், பாமக வேறு தளங்களிலிருந்து வரும் வாக்குகளை, சொல்லிக்கொள்ளும் வகையில் எப்போதும் எதிர்பார்க்க முடியாது.
பாமகவுடன் ஒப்பிடுகையில், பல விஷயங்களில் பரந்துபட்ட வகையில் சிறப்பான முறையில் செயல்படும் விடுதலை சிறுத்தைகளுக்கு ‘சாதிக் கட்சி’ என்ற அடையாளம் எப்படி மாறவில்லையோ, அப்படித்தான் ஒரு பெரும்பான்மை சாதிக்கான பிரதிநிதியாக அடையாளப்படுத்தப்படும் பாட்டாளி மக்கள் கட்சியால், தமிழக சூழலில் சாதி அடையாளத்தை விட்டு பெரிதாக வளர்வது என்பது சாத்தியமில்லாத விஷயம்!