பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அதிலிருந்து விலகி, எடியூரப்பாவிற்கு ஆதரவளித்த விஸ்வநாத், தற்போது ‘ஆபரேஷன் கமலா’ தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்த தயாராகிவிட்டார்.
இதனால், முதல்வர் எடியூரப்பாவிற்கு கடும் தலைவலி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சிகளிலிருந்து 17 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்து, அதன்மூலம் அம்மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது.
வெளியேறிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி தருவதாக காவிக் கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், ராஜினாமா செய்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பாரதீய ஜனதா சார்பில் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டனர். ஆனால், அத்தேர்தலில் பெரும்பாலானோர் வெற்றிபெற்ற நிலையில், விஸ்வநாத் மற்றும் எம்டிபி நாகராஜ் உள்ளிட்ட சிலர் தோல்வியடைந்தனர்.
வெற்றி பெற்றவர்கள், வாக்குறுதி அளித்தபடி அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். மேலும், தோல்வியடைந்த நாகராஜ் எம்எல்சி ஆக்கப்பட்டார். ஆனால், எம்எல்சி பட்டியலில் இடம்பெற்றிருந்த விஸ்வநாத்தின் பெயர் கட்சி மேலிடத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், தனது கனவுகள் அனைத்தும் தகர்ந்த நிலையில், பாரதீய ஜனதாவின் மீதுள்ள கோபத்தின் காரணமாக, தற்போது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மர்மங்கள் குறித்து புத்தகம் எழுதி வருகிறார். அதை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
தற்போது இத்தகவல்தான் கர்நாடக அரசியலில் கடும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவர் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது, “மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த நான் பாரதீய ஜனதா ஆதரவு நிலை எடுத்தவுடன், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கைப் பிறந்தது.
நாங்கள் மும்பைக்கு விமானம் ஏறினோம். எடியூரப்பாவை முதல்வர் ஆக்கினோம். எங்களின் தியாகத்தின் காரணமாக, இன்று எடியூரப்பா முதல்வராக இருக்கிறார். எனவே, அப்போது நடந்த அனைத்தையும், அனைவருக்கும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
எனது புத்தகத்தை, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரேநேரத்தில் வெளியிட விரும்புகிறேன். தங்கள் அறிதலைத் தாண்டி, கர்நாடக அரசியல் களத்தில் என்ன நடந்தது என்பதை கர்நாடக மாநில மக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு இந்தியரும் அறிந்துகொள்ளும் உரிமைப் பெற்றுள்ளனர்” என்றார் அவர்.
இந்த விஸ்வநாத், கடந்த 2018ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியில் இணைவதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கியத் தலைவராக இருந்தவர். இவர் தனது புத்தகத்திற்கு “பாம்பே டேய்ஸ்” என்று பெயரிட்டுள்ளார்.
ஆனால், இவரின் புத்தகம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதுகுறித்து கர்நாடக பாரதீய ஜனதா முதல்வர் எடியூரப்பா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அநேகமாக, எதையேனும் செய்து, விஸ்வநாத்தை சரிக்கட்ட பாரதீய ஜனதா முகாம் இனிவரும் நாட்களில் முயலக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
விஸ்வநாத் உள்ளிட்ட வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், பாரதீய ஜனதா தரப்பில் தலா ரூ.30 கோடி அளிக்கப்பட்டதாக முன்னாள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியிருக்கிறார்.