இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதாக இருந்தாலும், கிரிக்கெட் என்பது நாட்டின் மூச்சாக மாறி அதிககாலம் ஆகிவிட்டது.
இந்தியா போன்ற பெரிய நாட்டில், ஏராளமான கிரிக்கெட் மைதானங்கள் உண்டு. இங்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடக்கும்போது, சில மைதானங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுவதுண்டு.
இந்தியாவில், எத்தனை மைதானங்கள் இருந்தாலும், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் அமைந்த வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. முக்கியமான கிரிக்கெட் தொடர்களின் இறுதிப்போட்டிகள் அந்த மைதானத்தில் நடத்தப்படுவது வாடிக்கை.
கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியும் அந்த மைதானத்தில்தான் நடைபெற்றது.
ஆனால், தற்போது உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம், வான்கடே மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையில், முதன்மைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இதற்கடுத்து, இந்தியாவில் நடைபெறக்கூடிய முக்கிய கிரிக்கெட் தொடர்களிலும், இந்த மைதானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.
மொத்தம் 1 லட்சத்து 32000 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையிலான இந்த மைதானம், உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் ஒட்டுமொத்த அளவில் உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டு மைதானம் என்ற முக்கியமான காரணங்கள் இருந்தாலும், இந்த மைதானம் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.
ஏனெனில், இன்று மத்திய ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் குஜராத்திகள்! அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இது எல்லாவற்றையும்விட, அந்த மைதானத்திற்கு யாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதுதான் மிக மிக முக்கியமான காரணம்!
எனவே, வரும் நாட்களில், அகமதாபாத் மைதானம், மும்பையின் வான்கடேவின் முக்கியத்துவத்தைப் பறித்து, முன்னிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்!