சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் 20ந்தேதி வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வரும், விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரியில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், சூட்டோடு சூட்டாக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த அதிமுக தீவிரப்படுத்தி வருகிறது. வாக்குச்சாவடிகள், தேர்தல் இயந்திரங்கள், வாக்குச் சீட்டு போன்றை அச்சிடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் வரும் 20ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.