மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில், ஒரேயொரு சதம் அடிக்கும்பட்சத்தில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார் இந்திய கேப்டன் விராத் கோலி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஒரு கேப்டனாக மொத்தம் 19 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் ரிக்கிப் பாண்டிங். விராத் கோலி இதுவரை கேப்டனாக அடித்துள்ள டெஸ்ட் சதங்கள் 18. இனி ஒன்று கிடைத்தால் சமன் செய்யலாம்; இரண்டு கிடைத்தால் முறியடிக்கலாம்.

ஆனால், இந்த விஷயத்தில் இருவரையும் விஞ்சி முதலிடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிராம் ஸ்மித். இவர் ஒரு கேப்டனாக அடித்த டெஸ்ட் சதங்கள் 25. இதில் வெளிநாடுகளில் அடித்த 17 சதங்கள் அடக்கம்.

எனவே, ஸ்மித்தின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இந்திய கேப்டன் கோலி இதுவரை மொத்தம் 25 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளர். அதில் 6 இரட்டை சதங்களும் அடக்கம். இந்த டெஸ்ட் தொடரில், மேற்கிந்திய அணியை, இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.