பெங்களூரு:

கர்நாடகா தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் எடியூரப்பா தனக்கென்று தனி செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முதல்வர் பதவியை இழக்க நேரிட்டபோது, 2012ம் ஆண்டு பாஜக.வில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி சாதித்து காட்டினார்.

இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலிலும் எடியூரப்பா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு உள்ளுக்குள் ஒரு அச்ச உணர்வு இருப்பதை தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் மோடி, அமித்ஷா கூட்டணி தான்.

கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு செல்வாக்கு இருந்தபோதும், ‘மோடி சுனாமி’ வீசுகிறது என்று அமித்ஷா பிரச்சாரம் செய்து வருகிறார். அதோடு எடியூரப்பா மகன் விஜயேந்திரா, அவருக்கு நெருக்கமான ஷோபா கரன்தியேஜி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க அமித்ஷா மறுத்துவிட்டார்.

மாறாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ரெட்டி சகோதரருக்கு சீட் வழங்கியதோடு, தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது எடியூரப்பாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. ரெட்டி சகோதரர்களுக்கு சீட் வழங்கியதற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர்களை அமித்ஷா சமாதானப்படுத்தியுள்ளார். எனினும் அமித்ஷா மீதான அதிருப்தி தொடர்கிறது.

அதோடு, ‘‘எடியூரப்பா அரசு ஊழல் அரசு’’ என்று அமித்ஷா வாய் தவறி கூறினாரோ? அல்லது வேண்டுமென்று கூறினாரோ? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், தனக்கு உரிய மரியாதை கிடைக்குமா? என்று எடியூரப்பாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக.வை பொறுத்தவரை ஓய்வு வயது 75 என்று நிர்ணயம் செய்துள்ளனர். எடியூரப்பாவுக்கு தற்போது வயது 75.

இமாச்சல் பிரதேச தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமால் தோல்வி அடைந்தார். இதில் பாஜக.வின் உள்ளடி வேலை இருந்தது தெரியவந்தது. இதேபோன்ற ஒரு நிலையை கட்சியின் தலைமை தனக்கு ஏற்படுத்திவிடுமோ? என்று எடியூரப்பா அஞ்சுகிறார். இது குறித்து தனக்கு             நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரிடமும் எடியூரப்பா தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார்.

மே 15ம் தேதி கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் பாஜக.வுக்கு தோல்வி ஏற்பட்டால் அதற்கு முழுக்க முழுக்க அமித்ஷா எடுத்த தனிப்பட்ட முடிவுகள் தான் காரணமாக இருக்கும். அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமித்ஷாவை பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து நீக்க ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இவருக்கு பதிலாக நிதின்கட்காரி அல்லது ராஜ்நாத்சிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.