ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் ஜெயராமன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை இன்று சொந்த ஊரான மயிலாடுதுறை சேந்தங்குடியில்  இயற்கை எய்தினார்.

தந்தையின் இறுதிச் சடங்கிற்கு ஜெயராமன் கலந்துகொள்ள, அவருக்கு  நீதிமன்றம் ஜாமீன்  அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சோகத்தில் இருக்கும்  கதிராமங்கலம் போராட்டக்காரர்கள், “ ‘எங்களுடைய போராட்டத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து ஒழுங்குக்கு கொண்டு வந்தவர்  பேராசிரியர் ஜெயராமன்தான். எந்த தவறும் செய்யாத அவர் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள்.

எங்கள் மீது திட்டமிட்டு தடியடி நடத்தியதே காவல்துறையினர்தான். ஆனலா  எங்கள் மீது வழக்குப்போட்டும் சிறையில்  அடைத்திருக்கிறார்கள். மேலும் ஜெயராமன் மீது  கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 15 வழக்குகளுக்கு மேல் பதிவுசெய்திருக்கிறார்கள்.  குண்டர் சட்டம் போடவும் முயற்சி செய்தனர்.

இதுவரை தஞ்சை குற்றவியில் நடுவர் நீதிமன்றத்தில் 3 முறை ஜெயராமன் விடுதலைக்காக ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தோம். ஆனால், மூன்று முறையும் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டதுது. இருபது நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தவரும் ஜெயராமன் அய்யாவை  தந்தையின் இறுதிச் சடங்கிற்காவது நீதிமன்றம் ஜாமீன்  அளிக்க வேண்டுகிறோம்” என்று அந்த மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.