கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அரைசதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், பெவிலியன் நோக்கி நடந்து சென்றார்.

அப்போது திடீரென திரும்பிய அவர், விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்த பெர்னாண்டோவை நோக்கி சென்றார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவரை ஒருவர் நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறினர்.

ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை வீரர்களும் கள நடுவர்களும் தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.

அப்போது களத்தில் இருந்த மற்றொரு இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வாலை சமாதானப்படுத்தி மீண்டும் பெவிலியனுக்கு அழைத்துச் செல்ல முயன்றார். எனினும், ஜெய்ஸ்வால் தொடர்ந்து பெர்னாண்டோவை நோக்கி சென்றதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலை முட்டியதாக புகார்

இந்த மோதலின்போது ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவின் தலையில் தனது தலையால் மோதியதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அது கடுமையான விதிமீறல் என நிரூபிக்கப்பட்டால் ஜெய்ஸ்வால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஐசிசி நடத்தை விதிகளின்படி, வீரர்கள், நடுவர்கள் அல்லது பார்வையாளர்களுக்கு எதிரான கடுமையான வன்முறை, மிரட்டல் அல்லது தகாத நடத்தை லெவல்-4 விதிமீறலாக கருதப்படலாம்.

அத்தகைய விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள் வரை தடை விதிக்கப்படலாம். மிகக் கடுமையான வழக்குகளில் வாழ்நாள் தடை கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், ஜெய்ஸ்வாலுக்கு உண்மையில் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது சம்பவம் குறித்த விசாரணை மற்றும் விதிமீறலின் தன்மையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

இதற்கு முன்பும் மோதல்

ஜெய்ஸ்வால் களத்தில் மோதலில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல.

2022-ம் ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபி போட்டியின்போதும், தெற்கு மண்டல அணியின் வீரர் டி. ரவி தேஜாவுடன் ஜெய்ஸ்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர் பலமுறை எச்சரித்தபோதும் மோதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மேற்கு மண்டல அணியின் கேப்டனாக இருந்த அஜிங்க்ய ரஹானே தலையிட்டு, ஜெய்ஸ்வாலை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதனால் அந்தச் சம்பவம் மேலும் பெரிதாகாமல் முடிவுக்கு வந்தது.