விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வெற்றிக்கான இலக்காக 395 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 11 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

டிராவில் முடியவே அதிக வாய்ப்பு என்று மூன்றாவது நாளில் கணிக்கப்பட்ட இப்போட்டி, தற்போது வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கவும் வாய்ப்புள்ள போட்டியாக மாறியுள்ளது.

71 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக ஆடியது. மயங்க் அகர்வால் 7 ரன்களுக்கு நடை‍யைக் கட்ட, இந்த ஆட்டத்திலும் ரோகித் ஷர்மா சிறப்பித்தார். அவர் 149 பந்துகளில் 127 ரன்களை அடித்தார். கிட்டத்தட்ட இது ஒருநாள் போட்டியின் சதம்!

சத்தீஷ்வர் புஜாரா 81 ரன்களை அடித்தார். அதிரடிக்காக முன்னரே களமிறங்கிய ஜடேஜா, 32 பந்துகளில் 40 ரன்களை அடித்து அவுட்டானார். கேப்டன் கோலி 31 ரன்களுடனும், ரஹானே 27 ரன்களுடனும் இருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. கோலி, ரஹானே மற்றும் ஜடேஜா ஆடியது ஒருநாள் போட்டி ரகம்.

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து, எதிரணிக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, கடந்த போட்டியில் சதமடித்த டீன் எல்கரின் விக்கெட்டை இழந்துவிட்டது. அந்த அணி 11 ரன்களை எடுத்து 1 விக்கெட் இழந்துள்ளது.

நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், ஆடுகளம் சுழற்பந்துக்கு ஒத்துழைத்தால், இந்தியாவின் வெற்றி நிச்சயம்!