ஹூஸ்டன்

மெரிக்காவில் மோடி கலந்துக் கொள்ளவிருந்த ஹவ்டி மோடி நிகழ்வு நடக்க  உள்ள ஹூஸ்டன் நகரம் கனமழையால் தவித்து வருகிறது.

ஐநா சபையின் 74 ஆம் ஆண்டு கூட்டம்  அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.    அக்கூட்டத்தில் பங்கு பெற அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஹவ்டி மோடி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் நகரில்  நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்வில் கலந்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.  வெள்ளை மாளிகை அலுவலகம் இந்த தகவலை  வெளியிட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் பங்கு கொள்ளும் இந்தக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது  அமெரிக்க வாழ்  இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.   இந்தியர்கள் நடத்தும் விழா ஒன்றில் ஒரே மேடையில் மோடியும் டிரம்பும் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தற்போது ஹூஸ்டன் நகரில் கன மழை பெய்து வருகிறது.   டெக்ஸாஸ் மாகாணத்தின் பல நகரங்களிலும் கன மழை பெய்வதால் கடும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.    அந்த பகுதிகளில் டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் அவசர நிலை அறிவித்துள்ளார்.   மேலும் இம்மாகாணத்தில் புயல் தாக்கப்படும் அபாயமும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆளுநர் கிரெக் அபோட், “இந்த கனமழை திடீரென பெய்யத் தொடங்கி உள்ளது.   இந்த மழையுடன் புயல் வீசவும் அதிக வாய்ப்புள்ளது.   எனவே மக்கள் இந்த கனமழை கடும் புயலாக மாறும் என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.    இந்த கனமழையை ஒட்டி மாகாணத்தின் 13 பகுதிகளில் அவசர எச்சரிக்கையை அறிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த மழையால் ஹூஸ்டன் நகரில் நடைபெற உள்ள மோடியின் விழா  நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.  ஆனால் ஹூஸ்டன் நகரில் நடைபெற உள்ள ஹவ்டி மோடி நிகழ்வின் அமைப்பாளர்கள் இந்த மழையால் விழாவுக்குத் தடை ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   இந்த விழா சிறப்பாக நடைபெற 1500 தொண்டர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.