புதுடெல்லி: வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி விதிப்பை 10% என்ற அளவில் தற்காலிகமாக குறைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு(சியாம்).
இந்த அமைப்பின் சார்பில் கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்குதலை ஒட்டி நாடு முடக்கப்பட்டதால், வாகன விற்பனை முற்றாக வீழ்ந்துவிட்டது. இதன் காரணமாக, இத்துறை, நாள் ஒன்றுக்கு ரூ.2,300 கோடி இழப்பை சந்தித்து வருகிறது.
இந்த பாதிப்பை சரிசெய்ய ஏதுவாக, வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விதிப்பை தற்காலிக முறையில் 10% என்ற அளவில் குறைக்க வேண்டும். மேலும், பழைய வாகனங்களை, சாலையிலிருந்து அப்புறப்படுத்த, ஊக்க சலுகைகள் வழங்குவதன் மூலம் தேவையை அதிகரிக்க உதவ வேண்டும்.
தேவையை மீண்டும் அதிகரிப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் எதிர்மறை எண்ணங்களை மீறி, வாகனங்களை விற்றாக வேண்டும்.
எனவே, தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்களுக்கும், ஜிஎஸ்டி விதிப்பை 10% என்ற அளவில் குறைத்து, தேவையை அதிகரிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.