டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், பேரணி நடத்துவது குறித்து, நாளை முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்  நவம்பர் 29ம் தேதி தொடங்கி ஒரு மாதம் காலம் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத் தொடரின் போது தினசரி 500 விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்துவார்கள் என்று டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாய சங்கத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மக்களிடையே உரையாற்றும்போது, 3 வேளாண் சட்டங்களும்  திரும்பப்பெறும் என்று அறிவித்தார். அதற்காக மன்னிப்பு கோரியவர், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்புங்கள் என தெரிவித்தார். மேலும், மற்ற பிரச்சினைகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நிறுத்தப்படும் என்று கருதப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டம் திரும்ப பெறும் வரை போராட்டக்களத்திலேயே காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் வந்து நடத்தும் போராட்டம் இன்னும் பின்வாங்கப்படவில்லை என்று மற்றொரு விவசாய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்து விவசாய சங்கத்தினரும், நாளை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதன்பிறகே, டிராக்டர் போராட்டம், டெல்லி எல்லையில் இருந்து வெளியேறுதல் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.