சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அக்கட்சி திரும்பப்பெறும் என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தீர்மானம் எப்படியும் தோல்வியடையும் என்று தெரியவந்ததாலேயே இம்முடிவை அக்கட்சி எடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைவிட, எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவதே முக்கியம் என்று சமீபத்தில் ஸ்டாலின் பேசியதை சுட்டிக் காட்டுகின்றனர் அந்த வட்டாரத்தினர்.

22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக அனைத்திலும் வெற்றிபெற்றுவிட்டால், சில அதிருப்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்து, அதன்மூலம் ஆட்சியை தக்க வைக்கலாம் என எடப்பாடி தரப்பு முடிவுசெய்த நிலையில், அத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தவே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது திமுக.

ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக போதுமான அளவுக்கு வெற்றிபெற்றுவிட்டதாலும், திமுக கோட்டைவிட்டு விட்டதாலும், இந்த தீர்மானமே தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது. எனவேதான், அதை திரும்பப்பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.