அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் விபரங்கள் வெளியாகிவிட்டன. அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.
பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் விபரம் வெளியாகிவிட்டாலும், பாமக மட்டும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சிகள் போட்டியிடும் 43 தொகுதிகளையும் குறிவைத்து, திமுக நேரடியாக களம் இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளையும் குறிவைத்து களமிறங்கிய திமுக, அனைத்திலும் பாமகவை தோற்கடித்தது. சாதியை வைத்து மீண்டும் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பிலிருந்த அன்புமணியும் காலியானார். இதே கதைதான் கடந்த 2009 தேர்தலிலும் நடந்தது.
அதேசமயம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்தே போட்டியிட்டு வீழ்த்தின.
இந்நிலையில், இது சட்டமன்ற தேர்தல் என்பதால், இதை திமுக ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த 2 கட்சிகளும் போட்டியிடும் 43 தொகுதிகளிலும், தானே போட்டியிட்டு, மொத்தமாக அள்ளும் திட்டத்தை திமுக கையில் எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.