சென்னை: பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் சரத்குமார் இன்று காலை கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு அரசியல்  களம் தகிக்கத்தொடங்கி உள்ளது.  கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில்,  சாதிய அமைப்பு களை பிடிப்பதிலும்  அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த  நடிகர் சரத்குமாருக்கு இதுவரை எந்தவொரு கட்சி பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால், அவரை இழுக்க திமுக, அதிமுக கட்சிகள் வலைவிசி வந்தன.  இதற்கிடையில், நேற்று  (மார்ச் 22ந்தேதி)  சென்னையில் அகில இந்திய சரத்குமாா் தலைமை ரசிகா் நற்பணி மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கூடியது. இதில்  பேசிய சரத்குமார், எந்தப் பலனையும் எதிா்பாா்க்காமல் பாஜகவில் இணைந்தோம். தற்போது பாஜக மதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

ஆனால், கட்சியில் பதவியின்றி எப்படிச் செயல்படமுடியும் என ஆதரவாளா்கள் கேட்கும் நிலையுள்ளது. அந்தக் கோரிக்கையை பாஜக தேசியத் தலைவா்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அதற்கு பிறகும் தீா்வு கிடைக்காவிடில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.

பாஜகவில் தொடா்ந்து சிறப்பாகச் செயல்படவேண்டும். நமது செயல்பாட்டின் அருமை புரிந்தால் பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். அந்த நம்பிக்கை உள்ளது. சிலா் சமூக வலைதளத்தில் விமரிசிப்பதைப்போல வீட்டில் உட்காா்ந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதுதான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆகவே, நமது கோரிக்கையை பாஜக மாநிலத் தலைவரிடம் முறையிட்டால், அவா் நிச்சயம் நிறைவேற்றுவாா்.

கட்சியில் பொறுப்பின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்கமுடியாது. அனைத்துத் தகுதியும் இருந்தும் என்னைக் கட்சியில் அடையாளப்படுத்தாது ஏன் எனத் தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.நயினார் நகேந்திரன் – சரத்குமார் சந்திப்புஇந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனை சென்னையில் சந்தித்து சரத்குமார் ஆலோசனை

சரத்குமாரன் இந்த பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகந்திரனை  சந்தித்து சரத்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியில் பொறுப்பு வழங்கக் கோரி நயினார் நகேந்திரனிடம் சரத்குமார் கடிதம் வழங்கினார்.

பின்னர்  செய்தியாளர்களுடன் பேசிய சரத்குமார், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையிலும், நான் சொன்னதன் அடிப்படையிலும் வேண்டுகோளை அளிக்கிறோம் என சொன்னோம். அதனடிப்படையில் வேண்டுகோளை கொடுத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். நேற்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நிவர்த்தி கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

பியூஷ் கோயலை சந்திப்பீர்களா என செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் இன்று கோயம்புத்தூர் செல்கிறேன். அழைத்தால் வந்து சந்திப்போம் என பதிலளித்தார்.

[youtube-feed feed=1]