புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வேறொரு வித்தியாசமான சென்டிமென்ட்டை முன்வைத்துள்ளது பிரபல பத்திரிகை நிறுவனத்தின் ‘தரவுகள் அறிவுதள பிரிவு(Data Intelligence Unit)’.

நாடு முழுவதும் பரவியுள்ள குறிப்பிட்ட 20 தொகுதிகளில், எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றிபெறுகிறதோ, அவர்களே மத்தியில் ஆட்சி அமைக்கிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். கடந்த 1998ம் ஆண்டு தேர்தல் முதலே, இதுதான் நடைமுறையில் நிகழ்ந்து வருகிறது என்றும் அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.

அந்த 20 மக்களவைத் தொகுதிகள், மொத்தம் 11 மாநிலங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆந்திரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகள் உள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதிகள் உள்ளன. இவைதவிர, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், மராட்டியம் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களிலும் தலா 1 தொகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அந்த ஒரு தொகுதி, இப்போதும் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கும் தருமபுரி.

இந்தத் தொகுதியின் உதாரணத்தைப் பார்த்துவிடலாமே;

* 1998ம் ஆண்டில் பாமகவின் பாரிமோகன் வெற்றிபெற்றார் – பாமக இடம்பெற்ற பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.

* 1999ம் ஆண்டில் பாமகவின் இளங்கோவன் வெற்றிபெற்றார் – பாமக இடம்பெற்ற பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.

* 2004ம் ஆண்டில் பாமகவின் செந்தில் வெற்றிபெற்றார் – பாமக இடம்பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.

* 2009ம் ஆண்டில் திமுகவின் தாமரைச் செல்வன் வெற்றிபெற்றார் – திமுக இடம்பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.

* 2014ம் ஆண்டில் பாமகவின் அன்புமணி வெற்றிபெற்றார் – பாமக இடம்பெற்ற பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தது.

அரசியலுக்கும் சென்டிமென்டிற்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்புண்டு என்பது இந்த விஷயத்திலும் உண்மையாகிறது.

– மதுரை மாயாண்டி