வாஷிங்டன்: இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
லடாக், வடக்கு சிக்கிம் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு வருவது இரு நாடுகளிடையே போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில்  சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கு ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும். வீரர்கள் பயிற்சியை கூட்ட வேண்டும், ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜின்பிங் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

இரு நாடுகளுக்கு இடையே இப்போது நிலவும் பிரச்னைகளுக்கு நடுவராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்யவோ அமெரிக்கா தயாராக உள்ளது. இந்த விவரத்தை நாங்கள் ஏற்கனவே இந்தியா, சீனாவிடம் தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
டிரம்ப் இப்படி ஒரு பக்கத்தில் அறிவித்தாலும் மறு பக்கத்தில் தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க ரோந்து கப்பல்கள் பணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.