டில்லி,
விமானங்களில் பயணிகள் பயணிக்கும்போதே இன்டர்நெட் உபயோகப்படுத்தும் வகையில் அனைத்து விமானங்களில் வைபை சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நாடுகளில் உள்ள விமானங்களில் வைபை வசதி உள்ளது. ஆனால், இந்தியாவில் இதுவரை விமான பயணத்தின்போது மொபைலில் பேசவோ, இன்டர்நெட் சேவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க தடங்களில் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களை மீண்டும் கொண்டு செல்லவும், வைபை வசதி உபயோகப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.
வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு விமான நிறுவனங்கள் வைபை வசதி அளிக்கின்றன. அந்த விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் வரும்போது வைபை சேவை துண்டிக்கப்பட்டுவிடும். அதைத்தொடர்ந்து இந்திய விமானங்களிலும் வைபை வசதி பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிலும் விமானங்களில் வைபை வசதி பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கிட தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய விமான போக்கு வரத்துத்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, விமானங்களில் வைபை சேவையை பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறி உள்ளது.
அனைத்து விமானங்களில் வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தி விமான பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக கிடைத்துள்ளது.
இதன் காரணமாக இனிமேல் விமானத்தில் பறக்கும்போதே பேஸ்புக் அப்டேட் போடலாம்…. வாட்ஸ்அப்பில் படம் பகிரலாம்… சமுக வலைதளங்களில் அரட்டை அடிக்கலாம்….