பெங்களூரு,
ஜியோ உள்பட மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையை விட அதிவேக இன்டர்நெட் சேவையை பெங்களூரில் அளித்து வருகிறது புதிய வரவான ‘வைபை டப்பா’.
குறைந்த கட்டணத்தில் அதிவேக சேவை வழங்கி வருவதால், பயனாளர்கள் மற்ற தொலைத் தொடர்பு சேவைகளில் இருந்து வைபை டப்பாவுக்கு மாறி வருகிறார்கள். இதன் காரணமாக ஜியோ உள்பட மற்ற தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகியோரால் சமீபத்தில் தொடங்கப்பட்துதான் வைபை டப்பா எனப்படும் தொலை தொடர்பு சேவை நிறுவனம். இந்த நிறுவனம், தங்களது சேவையை ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் அதிரடி திட்டங்களை அறிவித்து உள்ளது.
இந்த சேவையை பெற குறைந்த பட்சம் ரூ.2 போதுமானது. ரூ.2, 10, 20 என்று பல்வேறு வகையிலான சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் அறிமுகப்படுத்தி உள்ளது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நிறுவனத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வைபை டப்பா சேவையை ரூ.2க்கு ரிசார்ஜ் செய்தால், பயனாளர்களுக்கு, 100 எம்.பி. அளவிலான டேட்டா கொடுக்கப்படுகிறது. அதுபோல 10 ரூபாய்க்கு, 500 எம்.பி.; 20 ரூபாய்க்கு, 1 ஜி.பி., டேட்டா வசதியை கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக பயனாளர்கள் வைபை டப்பாவை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக பயனாளர்களின் வசதிக்காக, டீக்கடை, லாட்ஜ் மற்றும் முக்கியமான இடங்களில், ‘வை பை டப்பா’ டோக்கன் விற்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பயனாளர்கள் இந்த டோக்கனை வாங்கி, மொபைல் எண்ணை பதிவு செய்து இணைய வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
வைபை டப்பாவின் அதிவேக வளர்ச்சி மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.