கொல்கத்தா:

பாஜக எம்பியும், மேற்கு வங்க இளைஞர் அணி தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான், திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தல் பேரணியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் 40 பேர், சுவெந்து அதிகாரி தலைமையில் பாஜக-வில் இணைந்தனர். 6 திரிணாமூல் எம்எல்ஏ-கள் பாஜக-வில் இணைந்தனர்.

இதையடுத்து, திரிணாமூல் கட்சியில் இருந்து அனைவரும் விலகி விடுவார்கள், மமதா பேனர்ஜி தனியாக போகிறார் என்று அமித் ஷா பேசி இருந்தார்.

இந்நிலையில், பாஜக எம்பியும், மேற்கு வங்க பாஜக இளைஞர் அணித் தலைவருமான சுமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் திரிணாமூலில் இணைந்துள்ளார். இவர் பாஜகவின் மகளிர் அணித் தலைவி பதவியே கேட்டதாக கூறப்படுகிறது. அது கிடைக்காததால் திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளார்.

இது குறித்து சுஜாதா கூறுகையில், ‘ மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கு 2 எம்பிக்கள் மட்டும் இருக்கும் போதே, நான் கட்சியில் பணியாற்றி உள்ளேன். இப்போது 18 பேர் உள்ளனர். புதிதாக சேர்பவர்களுக்கு பல வாய்ப்புகள் தரப்படுகிறது. திரிணாமூல் கட்சியின் ‘பி‘ டீமாக பாஜக மாறி விட்டது. அப்புறம் ஏன் திரிணாமூல் கட்சியில் நான் சேரக் கூடாது?’, என்றார்.

மேலும் தன்னைப் பின்பற்றி தனது கணவரும் திரிணாமூல் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில் மனைவி திரிணாமூல் கட்சியில் சேர்ந்ததை கணவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மனைவிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப போவதாக கூறியுள்ளார். மேலும், உடனடியாக தனது பெயரை மனைவி பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமித்ரா கான், எம்பி பதவிக்கு நின்ற மாவட்டத்துக்குள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்தது. அப்போது, கணவருக்காக சுஜாதா தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்தார் என்று கூறப்படுகிறது.