2003-ம் ஆண்டு சஜ்னி ஜினராஜ் என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் கணவர் மீது சந்தேகம் திரும்பியது. அகமதாபாத் போலீஸ் அவரை தேட ஆரம்பித்ததும் அவர் தலைமறைவானார்.

அதன்பிறகு நடந்தது சினிமாவையே மிஞ்சும் கதை!

மனைவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருண் ஜினராஜ், தனது பழைய ஹாஸ்டல் நண்பரான பிரவீன் பாட்டேலியின் அடையாளத்தை பயன்படுத்தி ‘பிரவீன் பாட்டேலி’ என்ற பெயரில் புது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தலையை மொட்டை அடித்தார். தோற்றத்தை மாற்றினார். பெங்களூரு சென்றார். அங்கு போலி அடையாளத்தில் நிறுவனங்களில் வேலை பார்த்து, இறுதியில் Oracle நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.22 லட்சம் சம்பளத்தில் சீனியர் மேனேஜராகவும் பணியாற்றினார்.

இதோடு கதை முடியவில்லை.

2008-ல் வேறு பெயரில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பெங்களூருவில் அவருடன் இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பெங்களூருவில் பிரவீன் பாட்டேலி என்ற பெயரில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்க அகமதாபாத் போலீசார் தருண் ஜினராஜை தொடர்ந்து தேடி வந்தனர்.

பல ஆண்டுகளாக இந்த ‘புது வாழ்க்கை’ ரகசியமாகவே சென்ற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து 2018ல், ஒரு நாள் Oracle அலுவலகத்தில் இருந்த லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து தனது தாயாருக்கு போன் செய்து ‘ஹலோ’ சொல்லி போலீஸுக்கு தன்னுடைய இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தார்!

அவரது தாயாரின் தொலைபேசி தொடர்புகளை போலீஸார் கண்காணித்து வந்த நிலையில், அந்த ஒரே போன் அழைப்பு விசாரணைக்கு முக்கிய தடயமாக அமைந்தது.

அழைப்பு சென்ற இடத்தைத் தொடர்ந்து போலீஸார் பெங்களூரை அடைந்தனர். அங்கு ‘பிரவீன் பாட்டேலி’ என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருந்தவர் உண்மையில் தருண் ஜினராஜ்தான் என்பதை உறுதி செய்தனர்.

15 ஆண்டுகளாக போலீஸாருக்கு ‘கண்ணாமூச்சி’ காட்டியவர், கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் 2023-ல் தருணுக்கு 15 நாட்களுக்கு தற்காலிக ஜாமீன் கிடைத்தது.

ஜாமீன் காலம் முடிந்ததும் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.

ஆனால்… ‘திரும்பி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்றவர், திரும்பி வரவே இல்லை!

ஆகஸ்ட் 19-ம் தேதி சிறைக்குத் திரும்ப வேண்டிய நிலையில் தலைமறைவானார். இந்த முறை பழைய ‘பிரவீன் பாட்டேலி’ பெயரையும் விட்டுவிட்டு, ‘ஜஸ்டின் ஜோசப்’ என்ற புதிய பெயரை வைத்துக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மீண்டும் தலையை மாற்றினார். தோற்றத்தை மாற்றினார். டாட்டூ போட்டுக்கொண்டார். டெல்லி நஜஃப்கரில் உள்ள PG விடுதியில் தங்கினார்.

அங்கேயும் புதிய பெயரில் வேலை தேடும் முயற்சியில் இருந்ததாக போலீஸ் தெரிவித்தது.

இந்த அவதாரம் முன்பு போல் ஆண்டுக்கணக்கில் நீடிக்காமல் போனது, சில வாரங்களிலேயே, அதாவது, 2023 அக்டோபர் 5-ம் தேதி நஜஃப்கரில் உள்ள PG-யில் வைத்து அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார் அவரை மீண்டும் கைது செய்தனர்.

ஆனால் முக்கிய ‘கிளைமாக்ஸ்’ இன்னும் வரவில்லை!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சஜ்னி ஜினராஜ் மரணம் தொடர்பான கொலை வழக்கில் தருண் ஜினராஜுக்கு நீதிமன்றம் இதுவரை இறுதித் தீர்ப்பு வழங்கவில்லை.

2024-ல் போலி அடையாளம், ஆவண மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் தொடர்பான தனி வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் போலி பாஸ்போர்ட், PAN கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தியதாக நீதிமன்றம் குற்றத்தை நிரூபிக்கப்பட்டதாகக் கூறியது.

இத்தனை திருப்பங்கள் இருந்தாலும், 2003-ல் சஜ்னி மரணம் தொடர்பான கொலை வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026 மார்ச்சிலும் அந்த வழக்கில் தருணின் வழக்கமான ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இருந்தபோதும், சஜ்னி ஜினராஜ் மரணம் தொடர்பான இறுதித் தீர்ப்பு இன்னும் எழுதப்படவில்லை!