சென்னையில் இன்று பிற்பகல் 12:30 மணி முதல் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

சென்னையின் பல இடங்களில் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது.

வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதை அடுத்து மார்ச் 11 முதல் மார்ச் 16ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மாலை வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.