நரோபா
நேற்று நடந்த டி 20 முதல் போட்டியில் மேற்கிந்திய அணி இந்திய அணையை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. நேற்றி இந்தியா- மேற்கிந்தியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் இந்திய அணியில் திலக் வர்மா, முகேஷ்குமார் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கைல் மேயர்ஸ் (1 ரன்), பிரன்டன் கிங் (28 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) இருவரும் யுஸ்வேந்திர சாஹலின் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். அடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் (3 ரன்) நிலைக்கவில்லை.
4-வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனும், கேப்டன் ரோமன் பவெலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். பவெல் 19 ரன்னில் வழங்கிய சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் தவற விட்டார்.
அணியின் ஸ்கோர் 96-ஆக உயர்ந்த போது நிகோலஸ் பூரன் 41 ரன்களில் (34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் பாண்ட்யா, சாஹல் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோமன் பவெல் 48 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எல்லைக்கோடு அருகே பிடிபட்டார். இதற்கிடையே ஹெட்மயரும் (10 ரன்) வீழ்ந்தார். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் மேற்கிந்திய பேட்ஸ்மேன்கள் வலுவான ஷாட் அடிப்பதில் சிரமப்பட்டனர்.
20 ஓவர் முடிவில் மேற்கிந்தியா 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப்சிங் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிறகு 150 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் சுப்மன் கில் (3 ரன்), இஷான் கிஷன் (6 ரன்) ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (21 ரன்), திலக் வர்மா (39 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (19 ரன்) கணிசமான பங்களிப்பு அளித்தும் போதுமானதாக அமையவில்லை.
20 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது.