ஆன்மீக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் குறித்து நாகரீகமற்ற மற்றும் அவதூறான கருத்துக்களை கூறிவரும் மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்குத் தொடர சென்னை உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள புகழ்பெற்ற பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தில் (BITS) வேதியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற பொறியாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், படிப்பை முடித்த பிறகு, மதச் சொற்பொழிவுகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் என மும்மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய துஷ்யந்த் ஸ்ரீதர், ஆங்கிலத்தைத் தவிர, அவரது தாய்மொழியான தமிழில் சொற்பொழிவுகளை வழங்கிவருகிறார். இதனால் சென்னை மட்டுமன்றி உலகம் முழுவதும் அவரது பேச்சை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராமாயணம் குறித்து வெளியான படத்தில் ராமர் அசைவம் சாப்பிட்டதாக குறிப்பிட்டது சர்ச்சையானது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த துஷ்யந்த் ஸ்ரீதர், ராமர் அசைவம் சாப்பிட்டதற்கான ஆதாரம் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து சனாதனிகளிடையே மோதலை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கோயில் ஆர்வலரும் ஆன்மீக பேச்சாளருமான ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் 2023 முதல் சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் ஆத்திரமூட்டும் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதால், “நீங்கள் ஏன் அவதூறு செய்கிறீர்கள்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2023 முதல் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் பட்டியலிட்டு, அவை தவறானவை, அநாகரீகமானவை, நியாயமான விமர்சனத்தின் வரம்புகளை மீறியவை என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தக் கருத்துகள் அனைத்தையும் நீக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்கவும், அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக ₹1 கோடி இழப்பீடு வழங்கவும் ஆர்வலருக்கு உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன் நேற்று (ஏப்ரல் 3, 2025) விசாரணைக்கு வந்தது.

ரங்கராஜன் நரசிம்மன் ஸ்ரீரங்கத்தில் நிரந்தரமாக வசிப்பவர் என்பதால் என்பதால் இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று ரங்கராஜனின் வழக்கறிஞர் வாதிட்டார்.

மனுதாரர் துஷ்யந்த் ஸ்ரீதர் பெங்களூருவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றபோதும் பெரும்பாலும் சென்னையில் தனது சொற்பொழிவுகளை நடத்திவருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர விருப்பியதாக அவரது வழக்கறிஞர் பதிலளித்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதுகுறித்து பதிலளிக்க ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஏப்ரல் 29 வரை அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைத்துள்ளார்.