சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு தீவிரம் டைந்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், நேற்றைய விசாரணையின்போது, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் 2 ஆண்டுகளாக தாமதம் செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், பாரதியார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற விதிப்படி துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த அனுமதி கோரி, கடந்த 2022 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ஆளுநர் தரப்பு, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கார் மீதான விசாரணைக்கு ஆகிய இருவர் மீதும் விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதியே ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தது.எ மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும், கே.சி.வீரமணி மீதான விசாரணைக்கு ஒப்புதல் தர அரசிடம் விவரம் கேட்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு அளித்த விவரம் நேற்று முன்தினம் பெறப்பட்டதாகவும் ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதா குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பரிந்துரைத்த 165 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், 53 கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலினையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண பத்திரத்தில் உள்ளது என்ன?
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அந்த பிரமாண பத்திரத்தில், தமிழ்நாடு ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் மசோதாக்களின் விவரமும் அதன் தற்போதையை நிலையும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 181 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டும், 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவத, கடந்த 2020ம் ஆண்டு 46 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில் 41 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 3 மசோதாக்கள் அரசால் வாபஸ் பெறப்பட்டன. 2 மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2021ல் 41 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் 40 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. ஒரு மசோதா அரசால் திரும்ப பெறப்பட்டது.
2022ல் 58 மசோதாக்கள் ஆளுநருக்கு வந்தது. அதில் 44 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. 6 மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளது.
இந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 181 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 152 மசோதாக்களுக்கு ஆளுநரால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 5 மசோதாக்கள் அரசால் திரும்ப பெறப்பட்டுள்ளன. 9 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன. 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 மசோதாக்கள் இதுவரை முடிவு எடுக்கப்படாமல் பரிசீலனையில் உள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மீதான புகாருக்கு அனுமதி கோரிய மனுவில் குறைபாடு இருந்ததால் அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டது. அதன்பிறகு உரிய விளக்கங்கள் பெற்று கடந்த 18ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு மனு கிடைக்கப்பெற்றது. பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு தொடர நவம்பர் 13ம் தேதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்வதற்காக அரசு மே மாதம் அனுப்பிய மனு பரிசீலனையில் உள்ளது. ஜி.பாஸ்கரன் மீது வழக்கு தொடர நவம்பர் 18ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2021ல் பதவியேற்ற நாளிலிருந்து இதுவரை தமிழ்நாடு அரசால் 580 திட்டங்கள் அனுப்பப்பட்டன. இதில் ஆளுநர் 362 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். 165 திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. 53 திட்டங்களுக்கான அனுமதி விசாரணை கட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான மசோதா கடந்த அக்டோபர் 26ம் தேதி அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.
2020 தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, 2022 தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த 2வது மசோதா, மீண்டும் 2023ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள 12 மசோதாக்கள் கடந்த 13ம் தேதி முடித்து வைக்கப்பட்டன. இந்த 12 மசோதாக்களில் 10 மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களும் கடந்த 18ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு ஆளுநரின் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.