சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிஏஏ போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டு, கூட்டத்தை கலைத்தது ஏன் என்று தமிழக முதல்வரிடம் சென்னை காவல் துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்தியஅரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஆங்காங்கே இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற நேற்றைய போராட்டத்தின்போது, கூட்டத்தினரை  கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் கோஷமிட்டனர்.தொடர்ந்து காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றனர்.  இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், திடீரெ போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது, சிலர், காவல்துறையினரை பிளேடால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, இணை கமிஷனர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

பின்னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போராட்டக்காரர்களுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்தும்,காவல்துறையினர் ஏன் தடியடி நடத்தினர் என்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற காவல்ஆணையர் அங்கு சிசிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஆனால், இந்த போராட்டத்தின்போது,  ஆணையர், இணை ஆணையர் தாக்கப்பட்டனர் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சென்னை காவல்ஆணையர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள காவல்துறையினரை சந்தித்தில் இருந்து, அது தவறான தகவல் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.