தற்போது தருண் விஜய்யை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் சமீப காலம்வரை அவரை புகழ்ந்தவர்கள் பலர். அதிலும் தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, தருண்விஜய்க்கு பாராட்டு விழாவே எடுத்தார். இது குறித்து வினவு இணைய இதழில் 2014/11/12/ அன்று துரை. சண்முகம் அவர்கள் எழுதிய கட்டுரை:
“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்.
ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது.
ஈழத்தமிழர் படுகொலை, மீனவர் படுகொலை, ஆரம்ப வகுப்பிலேயே தமிழ்வழிக் கல்வி அழிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு… என நீளும் அநீதிகளின் போது எங்கேயும் தலையைக் காட்டாத இந்த வெத்துத் தமிழ்ப் பேரவைக்கு பா.ஜ.க. தருண் விஜய் போலவே திடீர் தமிழ்க் காதல் வந்தது திகைக்க வைக்கிறது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டால் தனக்குத்தானே கால் அமுக்கு பேரவை, கை அமுக்கு பேரவை என்று அல்லக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் காட்டிக் கொள்ள தமிழகத்தில் பஞ்சமா என்ன?
தமிழை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழுக்குக் குரல் கொடுப்பதும், “தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க குரல் கொடுப்பது, திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகளின் திரு நாளாக கொண்டாட வேண்டும், இந்தியாவின் இரண்டாவது மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். (முதல் இடம் சமஸ்கிருதத்திற்கு அல்லது எல்லோரும் வைரமுத்து அளவுக்கு வாட்டப்படும் வரை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திக்கு போல) பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்க வேண்டும்” என்றெல்லாம் பா.ஜ.க. தருண் விஜய் போராடுவதால் பாராட்டு விழா நடத்துவதாக வைரமுத்து அளக்கிறார்.
அட, ஈர வெங்காயமே! ஆக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இனி தமிழை வாழவைக்க முடியாது என்று தன்னை வைத்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டது கவிப்பேரரசு!
கால்டுவெல் கூட தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத அயர்லாந்துக்காரர்தான், ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு மரபில் தமிழின் தனித்துவத்தை அவர் ஆதாரங்களுடன் நிறுவியதும், பல அயல்நாட்டு அறிஞர்கள் தமிழின் செம் மொழித்தன்மைக்கு குரல் கொடுத்ததும் வரலாறு.
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என எழுதச் சொன்னதும், பெஸ்கி பாதிரியார் என்ற வீரமாமுனிவர் இலக்கணம், அகராதி வரைந்து இனிய தமிழுக்கு ஏற்றம் தந்ததும், வைரமுத்துவுக்கு வசதியாய் காவி மசக்கையால் மறந்துபோனதா?!
ஆரிய சமஸ்கிருதத்தையும், அதன் நாறிய இனவெறி சரக்குகளையும் தள்ளிவிட்டு, அன்னைத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, “மீண்டும் சமஸ்கிருதத்தை அரியணைக்கு ஏற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக பேட்டியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன குள்ளநரி தருண் விஜய்க்கு பாராட்டாம்!
அப்படி என்ன போராடிவிட்டார், அந்த தமிழ்த் தருமி! சிதம்பர நடராசர் கோயிலில் தமிழ்பாட தீட்சிதர்களுடன் உழைக்கும் மக்களும், கம்யூனிஸ்டுகளும் சண்டைக்கு நின்று சாதித்த போது வைரமுத்து என்ன வளிமண்டலத்திலா இருந்தார்!
வாயைத் திறந்து தமிழுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட காணோம். மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘எழுதிக் கொடுத்ததை மயக்குறு வண்ணம் பேசுவதாலேயே தமிழுக்கு போராளி என்றால், இத்தனை இன அழிப்பையும் செய்துகொண்டே, தமிழ் பெயர்களை சிங்கள மயமாக்கிக்கொண்டே, இலங்கையில் தமிழ் இலக்கியத்தை பேச – கூட்டம் நடத்த குரல் கொடுத்த ராஜபக்சே கூட ஒரு போராளிதான், பாவம் பாராட்டுவிழா நடத்த வைரமுத்துவுக்குத்தான் வசதியாக நேரம் வாய்க்கவில்லை போலும்!
தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது இருக்கட்டும் முதலில் தமிழகத்தில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்று அறிக்கை விடவும் அதை தருண் விஜய்யின் தமிழக பா.ஜ.க. கூட்டாளிகள் வழிமொழியவும் யோக்கியதை உண்டா?
தமிழுக்காகத்தான் இத்தனையும் என்று நம்மிடம் போக்கு காட்டும் வைரமுத்துவிற்கே உரைக்கும் படி தருண் விஜய் தனது நோக்கத்தை தெரிவிக்கிறார் இப்படி “தமிழ்த் தாய்க்கான பணியை இந்தியத் தாய்க்கான பணியாகப் பார்க்கிறேன்.” அப்படிப்போடு! தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.
“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பெரு மறைப்பையும்…, உண்டு பண்ணுகிற ஆரிய பாஷையில் எனக்கு ஆசை வொட்டாது, சாகாக் கல்வியை லேசில் அறிவிக்கும்… தென் மொழியிடத்தே மனம் பற்றச்செய்த…” என்று தமிழை வெறும் மொழியாக மட்டும் பார்க்காமல் அதை ஆரிய வர்ணாஸ்ரம சமஸ்கிருத எதிர்ப்பின் வரமாகப் பார்த்த வள்ளலார், பார்ப்பனியத்துடன் முரண்பட்டு ஏற்படுத்திய அமைப்புக்குப் பெயர் சமரச சன்மார்க்க சபை! வர்ணாஸ்ரம வெறிக்கு தமிழனை கிடாவாக வெட்டி, தமிழை பொங்கலாக வைக்கும் சுத்த சமரச சரணாகதிக்குப் பெயர் ‘வெற்றித் தமிழ் பேரவை!’ தமிழை வெறும் சொல்லிலிருந்து மட்டும் பார்த்தால் நாம் எப்படி ஏமாந்துவிடுவோம், என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதான்!
நாம் சொல்வது என்ன? கவிப்பேரரசு காதில் ரீங்காரமிடும் தமிழ் கொசு தருண் விஜயே கூறுகிறார். “அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவை தமிழக கிராமத்தில் கொண்டாட உள்ளேன்.” (தினமணி, 11.11.2014). போச்சுடா! இனி வை.கோ., ராமதாசு வகையறாக்களுக்கு தமிழின சவடால் அடிக்க ஒரு பருக்கையும் மிஞ்சாது போல!
வரலாற்றில் ஆரியப் பார்ப்பனியம், அருந்தமிழ் நூல்களை பகையாடி தீயில் எரித்தது, உறவாடி ஆடிப்பெருக்கு நீரிலும் அழித்தது. எஞ்சியிருக்கும் தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத மறுப்பு போன்ற அடிப்படைகளையும் அழித்தொழிக்க இப்போது ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனக் கும்பல் தமது வரலாற்றுப் பகையான தமிழை அழித்தொழிக்க, தமிழுக்கு குரல் கொடுப்பதாய் வேலைகாட்டி, தமிழ், தமிழின உணர்வை உட்கவர்ந்து ஒழிக்கும் திட்டத்தோடு உறவாடிக் கெடுக்க முனைந்துள்ளது.
ஒரு ‘நல்லி’ எலும்பு கிடைத்தால் கூட வாய்ப்பை பயன்படுத்த நாயாய் அலையும் பா.ஜ.க காவிப்படை, தமிழகத்தின் ‘தலைசிறந்த எழுத்தாளர்’ நல்லி குப்புசாமி செட்டியின் எட்டு நூல் வெளியீட்டு விழாவையும் விட்டு வைக்காமல், உள்ளே நுழைந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாராட்டியுள்ளது. செட்டிக்கும் பா.ஜ.க. பட்டாய் விளையும் என்ற கணக்கில் மகிழ்ச்சி! செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு ‘தமிழ் கிளிப்பிங்ஸ்’ வரவு! ரஜினி வீட்டில் ‘டீ’, கமலுக்கு ‘குப்பை’, வைரமுத்துவுக்கு ‘தமிழ்’ என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
தமிழகத்தில் ஆடு, மாடுகளே அம்மா… அம்மே! என அழகு தமிழில் பேச கற்றுக் கொண்ட பிறகும், இன்னும் “அவா… பார்தம்…” என்று தம் கட்டும் சு.சாமி, இல.கணேசன் வாய்களை வைத்துக்கொண்டு இவர்கள் தமிழுக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சாதி வெறியை ஏற்காத திருக்குறளையும், “சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்” என்று சாதிவெறியை கக்கும் பகவத்கீதையும் சமமாக மதிப்பார்களாம்! இதுதான் பாரதப் பண்பாடாம்! இந்தக் கயமையை ஏற்க முடியுமா? தீண்டாமையையும் ஏற்போம்! திருக்குறளையும் ஏற்போம் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.
இதை அம்பலப்படுத்தி போராடத் துப்பின்றி, வடக்க உள்ளவனையே மடக்கிட்டோம் பாத்தியா என்ற மப்பு வேறு! உ.பி.யிலும், அரியானாவிலும், குஜராத்திலும் தாழ்த்தப்பட்டவர்களையும், இசுலாமியர்களையும் போட்டுத் தள்ளி விட்டு தமிழ் வாழ்க! என்று குரல் கொடுத்துவிட்டால் மட்டும் பாராட்டலாம் என்பதை விட பச்சை அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?
கம்பி வளைத்து, கரணை பிடித்து, சாரம்கட்டி வண்ணம் பூசும் வட மாநில தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து வரும் தமிழை, தெருக்குரலை ஆதரிக்கத் துப்பில்லை! கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!
வைரமுத்து மட்டுமல்ல பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் மனங்களை தமிழாலேயே என்கவுண்டர் செய்ய ஏராளமான இலக்கிய அமித்ஷாக்கள் களத்தில் நிற்கிறார்கள்! ஜோ.டி.குரூஸ், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பத்ரி இப்படி பலவிதமான ஷாக்கள் இலக்கியம், ஊடகம், நாடகம், சினிமா, தமிழ் என விதவிதமாக போட்டுத்தள்ள புறப்பட்டுவிட்டார்கள்! எச்சரிக்கை தமிழகமே, நம் எதிரில் தமிழ் படமெடுத்தாடும் காவிப் பாம்புகள்!
(நன்றி: vinavavu.com)