மதுரை
தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறி மைசூரில் ஏன் வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது
மைசூரில் ஏராளமான கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 60% தமிழ் மொழியிலான கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றை அங்கு சிலர் சேதப்படுத்துவதாகப் புகார் எழுந்தது. இதையொட்டி அதைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு உத்தரவு இடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனத் தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழிக் கல்வெட்டுக்கள் என ஏன் அடையாளப் படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுக்களில் 60 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுக்கள் என்னும் போது அவற்றை ஏன் மைசூரில் வைக்க வேண்டும் எனவும் அமர்வு கேள்வி எழுப்பியது. அது அரசின் கொள்கை முடிவு என மத்திய அரசு பதில் அளிக்கவே ஒன்றின் அடையாளத்தை மறைக்கும் வகையில் அரசின் கொள்கை முடிவு இருக்கக் கூடாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ”கடந்த 1980 ஆம் ஆண்டில் தமிழ் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கான 4 கல்வெட்டியலாளர்களில் இருவர் சென்னையிலும் இருவர் மைசூரிலும் உள்ளனர். தவிர சமஸ்கிருத கல்வெட்டியாளர் ஒருவர் சென்னையில் உள்ளார். “ எனத் தெரிவித்தது.
இதற்கு நீதிமன்ற அமர்வு தமிழகத்தில் சமஸ்கிருத மொழி கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.