தமிழகத்தின் மக்கள் நல திட்டங்களை ஏன் ‘இலவசங்கள்’ என்று அழைக்க முடியாது…
– தரணீதரன் மற்றும் பெத்தனவேல் குப்புசாமி
சாதி, மத மற்றும் பாலின பாகுபாடு நிறைந்த சமூகமாக விளங்கும் இந்தியாவில் சமநிலையற்ற பொருளாதாரம் நிலவுகிறது. இந்தியாவைப் போல் அல்லாமல் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வு உள்ள அமெரிக்காவில் கூட சமநிலையற்ற பொருளாதாரம் எந்த பலனையும் அளிக்கவில்லை.
வரலாற்று அடிப்படையில் பன்நெடுங்காலமாக இந்தியாவில் சாதி வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு புறையோடியிருப்பதை பல்வேறு இனக்குழுக்களின் கல்வி நிலையைக் கொண்டு உணரமுடிகிறது.
அடுக்கடுக்கான ஒன்றோடொன்று ஒட்டாமல் உரசாமல் மிதந்து கொண்டிருக்கும் நீர் திவலைகள் போல சாதி கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது என்று அரசியல் ஆய்வாளர் கிறிஸ்டோப் ஜேஃப்ரிலாட் கூறுகிறார்.
இந்தியா போன்ற ஒரு முழுமையற்ற சந்தையில், ஜாதி கட்டமைப்பு முக்கிய பொருளாதார மற்றும் சமூக ஆதரவை வழங்குகின்றன.
அமெரிக்காவில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களில் 90 சதவீதம் பேரும், 200 முதல்நிலை இந்திய பணக்காரர்களில் 97 சதவீதம் பேரும் மற்றும் இந்திய அரசுப் பணியில் உள்ள மத்திய அரசுத் துறை செயலாளர்களில் 95 சதவீதம் பேரும் உயர் சாதி வகுப்பினரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
சாதீய பாகுபாடு ஒருபுறம் இருக்க பாலின வேறுபாடு பார்ப்பதில் இஸ்லாமிய நாடுகளுக்கு சவால்விடும் நிலையிலேயே இந்தியா உள்ளது.
உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டு (2021) கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 156 நாடுகளில் இந்தியா 140 வது இடத்தில் உள்ளது. ’90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தம் இந்த வேறுபாட்டை மேலும் அதிகப்படுத்தியது.
இந்திய சந்தை உலக வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டபோது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த உயர் சாதியினர் அதிலும் பெரும்பாலும் ஆண்களே தங்கள் சமூக அமைப்புகள் மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏற்றம் பெற்றதுடன் ஏற்கனவே இருந்த பிளவுகளை மேலும் பெரிதாக்கினர்.
இருந்தபோதும், உறுதியான நடவடிக்கைகள், கல்விக்கான கட்டமைப்புகள் மற்றும் இலக்கு நோக்கிய பயணத்தால் இந்தப் பிளவை நீக்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டுள்ளது திராவிடக் கட்சிகளால் ஆளப்படும் தமிழ்நாடு.
இருப்பினும், முக்கிய ஊடகங்களின் பொதுக் கருத்து, ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத் திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று குறிப்பிடுவதோடு, அவை சாமானிய மக்களை சோம்பேறிகளாக்குவதாகவும் எந்த பலனும் இல்லாத திட்டங்கள் என்றும் முன்னிலைப்படுத்துகின்றன.
பெரும்பாலும் இந்த வாதம் சமூகத்தின் மேல்தட்டு மக்களால் குறிப்பிட்ட சாதியினரால் முன்னெடுக்கப்படுகிறது.
அப்படி விமர்சிக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்களில் ஒன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம். 2006 சட்டமன்ற தேர்தலில் ஒட்டு வாங்குவதற்காக செய்யப்படும் மலிவான பிரச்சாரம் என்றும் பொழுதுபோக்கு சாதனமான தொலைகாட்சி பெட்டியால் மக்களுக்கு என்ன பயன் என்றும் கேள்வியெழுப்பி இலவசங்களுக்கு எதிராக எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார்கள்.
பெண்களின் அணுகுமுறை மற்றும் நடவடிக்கையில் தொலைக்காட்சியின் தாக்கம் குறித்து தமிழ்நாடு, டெல்லி, பீகார், ஹரியானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிடும் ஜர்னல் ஆப் எகனாமிக்ஸ் இதழில் வெளியான அறிக்கையில், கிராமப்புறங்களில் தொலைக்காட்சியின் அறிமுகத்தால் மகளிர் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும் கேபிள் டி.வி.யின் வருகைக்குப் பின் ஆண் பிள்ளைகளை பெறுவதற்காக கருத்தரிப்பது மற்றும் குடும்ப வன்முறைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதோடு, குடும்பத்தில் பெண்களில் அதிகார பங்களிப்பை அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அறிவைப் பெறுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுத்தியது தமிழக அரசு.
பெண்களை மேம்படுத்தவும் அதிகாரம் பெறவும் தமிழக அரசின் இந்த முற்போக்கான தனித்துவமான உத்தி திராவிட நிர்வாகத்தின் இலக்கு நோக்கிய செயல்பாடுகளின் வெளிப்பாடு என்பதை இந்த ஆய்வின் முடிவைக் கொண்டு வாதிடலாம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தி.மு.க. வின் முன்னோடியாக நீதிக்கட்சி பெரும்பங்காற்றியிருக்கிறது என்பதை வரலாற்று சான்றுகள் நிரூபிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கல்வி வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தொழில்துறை வளர்ச்சி ஆகிய மூன்றிலும் வெற்றி பெற்றதோடு சாதி, மத பாலின வேறுபாட்டை சுருக்கியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் இலவச மதிய உணவுத் திட்டம், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள்கள் மற்றும் இலவச மடிக்கணினிகள் போன்ற நிதிப் பங்கீட்டுத் திட்டங்கள் (இலவசங்கள்) மூலம் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பாராட்டத்தக்க வளர்ச்சிகள் எட்டப்பட்டுள்ளதோடு மேலிருந்து கீழாகவும் அடிமட்டம் மேல்மட்டம் என்று அனைத்து நிலையிலும் இருந்த வேறுபாடுகள் கலயப்பட்டுள்ளன.
இலவச தொலைக்காட்சியோடு, பெண் கல்விக்கான இலக்கை எட்ட பட்டதாரிப் பெண்களுக்குக்கான திட்டங்கள் நல்ல பலனை அளித்துள்ளது.
உலகிலேயே அதிகமான பட்டதாரிகள் 49% தமிழ்நாட்டில் உள்ளனர் (US 37%), இது இந்திய சராசரியான 29% ஐ விட அதிகமாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை மற்றும் போராட்டத்திலிருந்து தமிழகத்தின் முக்கியத்துவம் தெரியும்.
பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69% இடஒதுக்கீட்டுடன் கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமூகக் குழுவிற்கும் கல்வியை உறுதி செய்துள்ளது தமிழ்நாடு.
உண்மையில், 1967 முதல் திராவிட அரசாங்கங்களால் பின்பற்றப்படும் உறுதியான நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களால் பின்பற்றப்படுகிறது.
90% பிரெஞ்சு ஜனாதிபதிகள், உயர்மட்ட தூதர்கள் மற்றும் அரசு ஊழியர்களை உருவாக்கும் பிரான்சின் எலைட் சயின்சஸ் போ, நேர்மறை பாகுபாட்டின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, இப்போது உறுதியான செயல் திட்டத்தைக் கொண்டுள்ளது.
மைக்கேல் சாண்டலின் ‘டைரனி ஆப் மெரிட்’ (Tyranny of Merit) என்ற புத்தகம் நுழைவுத் தேர்வுகளை ஏழைகளுக்கு எதிரான கடுமையான பாகுபாட்டுடன் தொடர்புபடுத்துகிறது, இது சில முக்கிய ஐவி லீக் பல்கலைக்கழகங்களை உறுதியான செயல் திட்டம் குறித்த முன்னெடுப்பில் ஈடுபட வழிவகுத்தது.
வெவ்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்தவர்களுக்கான கல்வியை அடைவதற்கும் சமூகத்தின் கீழ்நிலையைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் அது வழிவகுத்தது.
சரியான வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து, உயர் சாதியினர் அல்லாதவர்களை மருத்துவம், சட்டம், பத்திரிகை மற்றும் அதிகாரம் போன்ற பிற துறைகளில் நுழைவதற்கு இது வாய்ப்பாக அமைந்தது.
அதேபோல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்தியாவிலேயே தனித்தன்மை வாய்ந்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில்மயமான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அதற்குக் காரணம் ஒரு சில பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் அசாதாரணமாக அதிக சொத்து குவிந்திருப்பதே.
எம். விஜயபாஸ்கர் மற்றும் ஏ. கலையரசன் ஆகியோரின் கூற்றுப்படி திராவிடத்தால் தமிழ்நாடு தொழில்துறையில் மண்டல வாரியாகவும் (திருப்பூர் / சிவகாசி / வேலூர் போன்ற தொழில்துறை அலகுகளின் பரவல்) ஜாதிவாரியாகவும் பன்முகத்தன்மையோடு பரவலான வளர்ச்சி அடைந்திருக்கிறது.
மேலே உள்ள அட்டவணையில் இருந்து, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதிக எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்டவர்கள் இங்கு தொழில்முனைவோராக உள்ளது நிரூபணமாகிறது.
2013-14 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, நான்கில் ஒரு தலித் தொழில் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ளது. இதற்குக் காரணம் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி அரசியலில் (அப்பாவியாக ‘இலவசங்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது) ஆழமாக உள்ளது. ‘இலவசங்கள்’, உறுதியான நடவடிக்கை மற்றும் பிற திட்டங்கள் ஆகியவற்றின் நேர்மறையான தாக்கத்தால் பல்வேறு வகுப்பினருக்கிடையே தொழில்முனைவோரின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது.
உண்மையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பாஜகவின் கீழ் உள்ள மத்திய அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய சமூகக் கொள்கையுடன் தமிழ்நாட்டின் பொருளாதாரக் கொள்கையும் பின்பற்ற வேண்டும்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் பிற பொருளாதார வல்லுநர்கள் சொல்வது போல், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி, கீழ்மட்டத்தில் உள்ள 60% மக்களின் கைகளில் பணத்தை வைப்பதுதான். ஏழைகளுக்கு செலவு செய்வது பொருளாதாரத்தில் ஒரு அலை விளைவை உருவாக்குகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 4000 வழங்குவது, பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் போன்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாக ராஜன் மேற்கொண்டுவரும் நடவடிக்கை இதுபோன்றது தான்.
சொத்து வரிகளை அதிகரிப்பதற்கான நிதி அமைச்சரின் முன்மொழிவு, தாமஸ் பிக்கெட்டி மற்றும் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் போன்ற முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மூலதனத்திற்கு வரி விதிக்க முன்மொழிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது.
இத்தகைய பொருளாதாரக் கொள்கைகள் கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு, மாநிலத்திற்கு அசாதாரணமான பலன்களை அளித்துள்ளன.
இந்த வளர்ச்சித் திட்டங்கள் (‘இலவசங்கள்’) கடனை அதிகரிக்க வழிவகுத்துள்ளன என்பது மற்றொரு தவறான குற்றச்சாட்டு. ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்தால், 2014 வரை மாநிலத்தின் நிதி சரியாக இருந்தது மற்றும் அதன் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருந்தது.
2014 க்குப் பிறகு குறிப்பாக 2016 க்குப் பிறகுதான், மாநிலத்தின் கடன் மற்றும் நிதி நிலைமை முக்கியமாக ஊழல், பொறுப்பற்ற செலவு மற்றும் திறமையின்மை ஆகியவற்றால் மோசமடைந்தது.
திராவிட அரசியல் எப்போதுமே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த பாடுபடுகிறது மற்றும் ஏழைகள் மற்றும் வளர்ச்சியிலிருந்து விடுபட்டவர்களின் கைகளில் பணத்தை திணிக்கிறது.
பெட்ரோல் விலையைக் குறைத்து தமிழக அரசு ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு மாஸ்டர் ஸ்ட்ரோக்.
விலைக் குறைப்பு மக்கள்தொகையில் பெருமளவுள்ள இரு சக்கர வாகன ஓட்டிகளை சென்றடைகிறது, எனவே விலையை 3 ரூபாய் குறைப்பதன் மூலம், அது அவர்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கும், அதன் மூலம் தேவை அதிகரிக்கும்.
இருப்பினும் டீசல் விலை குறைப்பு பெரிய அளவில் உதவாது. டீசல் வாகனங்கள் பெரும்பாலும் பணக்காரர்களால் பயன்படுத்தப்படுகின்றன – எஸ்.யூ.வி. மற்றும் சொகுசு கார்கள்.
டீசல் விலையை குறைப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்பது இதற்கான எதிர் வாதமாக இருக்கலாம்.
டீசல் விலையானது போக்குவரத்துச் செலவில் 40% பங்களிக்கிறது அதனால் டீசல் விலை குறைப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% குறைய வழிவகுக்கும் என்பது தவறான வாதம், இந்த போக்குவரத்து செலவு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
மாறாக, பாஜகவின் கொள்கைகள், 2014 இல் ஆட்சி அமைத்ததில் இருந்து, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை நலிவடையச் செய்து வருகிறது.
எரிபொருளுக்கு அதிக வரி விதித்து – இந்தியர்கள் தங்கள் வருவாயில் அதிக சதவீதத்தை எரிபொருளுக்கு செலுத்துகிறார்கள் – பாஜக ஏழைகளின் கைகளில் இருந்து பணத்தைப் பறித்துள்ளது.
கார்ப்பரேட் வரிகளை கடுமையாகக் குறைப்பதன் மூலம், பெரும் பணக்காரர்களின் கைகளில் பணத்தைக் கொடுத்து, அதன் மூலம் நாட்டின் கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கச் செய்துள்ளது.
உண்மையில், மத்திய அரசு மறைமுக வரிகளை ஒட்டுமொத்தமாகச் சார்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் புண்படுத்துகிறது.
அதோடு, பாஜகவின் கீழ் உள்ள மத்திய அரசு, கல்விக்கான செலவினத்தை படிப்படியாகக் குறைத்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.
ஆய்வுகளின் அடிப்படையில், சமத்துவமின்மை அதிகரிப்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவதோடு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதுடன் நேரடி தொடர்புடையது.
எனவே சாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையிலான பிளவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்திய திராவிட அரசாங்கங்களின் நலத்திட்டங்கள், பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட தமிழ்நாடு ஜிடிபி வளர்ச்சியை மிக வேகமாக அடைய உதவியது.
ஆகையால், தமிழ்நாட்டின் மக்கள் நல திட்டங்களை ‘இலவசங்கள்’ என்று கூறிவிட முடியாது, அவை நிலையான வளர்ச்சியைத் தூண்டும் பொருளாதாரத் தேவைகளை உள்ளடக்கியது.