அகமதாபாத்
பிரபல நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்ற கூட்டம் ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது.
நவம்பர் மூன்றாம் வாரத்தில் வழக்கமாக பாராளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும். ஆனால் தற்போது இதுவரை தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து பிரபல நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், “நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் பாராளுமன்ற குளிர்காலத் தொடருக்கான தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் தொடரில் கேள்விகள் எழுப்பவும் டில்லிக்கு வரவும் போதுமான அவகாசம் அளிப்பதற்காக நவம்பர் இரண்டாம் தேதி குடியரசுத் தலைவர் இந்த தேதிகளை அறிவிப்பார். இதுவரை இந்த தேதிகள் அறிவிக்கப் படாதது அரசின் நடத்தையின் மீது சந்தேகத்தை உண்டாக்குகிறது. அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால்தான் இந்த தேதிகள் முடிவு செய்யவில்லை என தோன்றுகிறது.
அரசியல் அமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தின் இரு கூட்டங்கள் ஆறு மாத காலத்துக்குள் நடைபெற வேண்டும். மழைக்காலத் தொடர் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி முடிவு பெற்றது. பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய தொடர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் நடைபெற வேண்டும் என இருந்த விதியை 1955ஆம் வருடம் மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு மழைக்காலத் தொடர் அக்டோபர்-நவம்பர் நடத்தப்பட்டது. அதனால் குளிர்காலத் தொடர் நடைபெறவில்லை. தற்போது ஜிஎஸ்டி, பொருளாதாரக் கொள்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதால் காங்கிரஸ் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகளை அறிவிக்காததை கண்டனம் செய்துள்ளது. “இது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் நடத்தப்படும் ஒரு தாக்குதல்” என வர்ணித்துள்ளது.
கடந்த 2016ஆம் வருடம் நடைபெற வேண்டிய 70 நாட்கள் அமர்வில் 48 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற தொடர் என்பது உறுப்பினர்கள் விவாதிக்கவும், கேள்விகள் கேட்கவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்டபடி தொடர் நடைபெறவில்லை எனில் எந்த ஒரு சட்டமும் கூட இயற்ற முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே பாராளுமன்ற தொடர் நடக்கும் தேதிகளை வருட ஆரம்பத்திலேயே முடிவு செய்ய வேண்டும் என திருணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ ப்ரெயின் அரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதை விடுத்து குஜராத் தேர்தலுக்காக ஏன் பாராளுமன்றத் தொடர் காத்திருக்க வேண்டும்?” என கூறப்பட்டுள்ளது.