சென்னை,
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கும், கொடநாடு எஸ்டேட்டுக்கும் இன்னும் எதற்கு போலீஸ் பாதுகாப்பு என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவரது போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பந்தோபஸ்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டித்ததை தொடர்ந்து விலக்கி கொள்ளப்பட்டது.
 

அதேபோல், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா மற்றும் கொட நாடு எஸ்டேட்டுக்கும் இன்னும் போலீஸ் பாதுகாப்பு நீடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பழைய மாமல்ல புரம் சாலையில் திருப்போரூர் அருகே, சிறுதாவூரில் சுமார் 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில் 17,200 சதுரடியில் கட்டப்பட்ட பங்களா அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பங்களாவின் பாதுகாப்புக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பங்களா நுழைவு வாயில் மட்டுமின்றி 16 இடங்களில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஒரு ஷிப்டுக்கு 32 பேராக, ஒருநாளைக்கு 3 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அங்கிருந்து போலீஸ் பாதுகாப்பு இன்னும் விலக்கி கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் 24 மணி நேரமும் எஸ்டேட் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் 5 உளவுத்துறை போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர், கருப்பு படை போலீசார் என 150 பேர் பணியில் இருந்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவே இல்லாத நிலையில் ஏன் இவ்வளவு பாதுகாப்பு.. யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது