சென்னை: சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்த பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் புகுந்து சாக்கடையை கொட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் வீட்டை துப்புரவு தொழிலாளிகள் உடையில் வந்து சிலர் தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தூய்மை பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அனைத்துகட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அத்துமீறி இந்த இழிவு செயலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் ஒருவரைக்கூட காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பது மர்மாக உள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவுக்கு சங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை அறப்போர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படி ஒரு இழிவான செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் கூட தாக்குதல் மற்றும் இந்த இழிவான செயல்களை செய்தவர்கள் மீது நாம் எந்தவித சட்ட நடவடிக்கையும் பார்க்கவில்லை என்றால் அரசுக்கும் அரசில் இருக்கின்ற அதிகாரம் படைத்தவர்களுக்கும் இந்த தாக்குதலிலோ அல்லது தாக்கியவர்களை காப்பாற்றுவதிலோ பங்கு உள்ளது என்றுதான் புரிந்துகொள்ள முடிந்தது.
இதுபோன்ற தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நம்மை ஒரு அநாகரீகமான சமூகத்தை நோக்கி எடுத்துச் செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் வன்முறையையும் வீடு புகுந்து சேதப்படுத்துவதையும் ஊக்குவிப்பது போல உள்ளது.
வன்முறை, பொருள் சேதம் செய்பவர்களை காப்பாற்றுதல், பேச்சுரமை, கருத்துரிமையை முடக்குதல் போன்ற அரசின் தொடர் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை துளிஅளவும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள்மீது, அதன் மூளையாக செயல்பட்டவர்கள் மீதும், அவர்களை காப்பாறறும் வகையில் நடவடிக்கைகாள மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள்மீது கிரிமினல் மற்றும் துறை ரீதியின நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.