சென்னை: புதுச்சேரி வாக்காளர்களின் “மொபைல் நம்பர்கள்” பாஜகவிற்கு எப்படி கிடைத்தது ? என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது என்றும் கேள்வி விடுத்துள்ளது.
தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு, தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜகவினர், வாக்காளர்களின் மொபைல் எண்ணுக்கு போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்ற மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில், எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக சைபர் கிரைம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், அதன் அறிக்கையைத் தொடர்ந்தே மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றதுடன், தேவைப்பட்டால், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றி ஆதார் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.